
கடந்த இரு வாரங்களாக எல்லா ஊடகங்களையும் உத்தரகாண்டின்மழை வெள்ளமும், நிலச்சரிவும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.மலை, பள்ளத்தாக்குகளின் இடுக்குகளிலும், மரக்கிளைகளிலும், இரவா? பகலா? எதுவென்று தெரியாமல் கூட்டம் கூட்டமாக ஒதுங்கியிருந்த மக்கள் தங்களை மீட்க எப்போது, யார் வருவார்கள் என்று காலத்தைக் கழித்த கொடுமையான தருணங்களை எல்லா ஊடகங்களும் ஒளிபரப்பு செய்தன. ஏறத்தாழ 1500 கி.மீ.
சாலைகளைக் காணவில்லை. 104 பாலங்கள் உருக்குலைந்து போய்விட்டன. 2000 கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. 700க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஜலசமாதி அடைந்துவிட்டன. இறந்தவர்கள் 15,000 பேர்களா? அதற்கும் மேலா? முற்ஷூலும் தெரியவில்லை.
ஆற்றின் குறுக்கேயும், ஓரமாகவும் ஏராளமான கட்டுமானங்களை உருவாக்கியவர்களுக்குத் தெரியாது இப்படி ஒரு மழையும், மலைச்சுனாமியும் வருமென்று. உண்மையில் உத்தரகாண்டில் பூகோள ரீதியாக இப்படி ஒரு மழை
பொழிவதற்கு வாய்ப்பு இல்லை. கடந்த 300 ஆண்டுகளாக எந்த மழை வெள்ளத்தாலும் அடித்துச் செல்லப்படாத ஆதிசங்கரர் சமாதி இப்போது இல்லை என்பதே அதற்கு சாட்சி.
இதற்கு மழை மட்டுமே காரணமில்லை. கேதர்நாத்தின் மூன்று பக்கங்களில் மேற்குப்புறம் இருந்த கேதர்டோம் என்கிற பனிச்சிகரம் உடைந்து அருகிலிருந்த சர்பால் ஏரியில் மூழ்கியிருக்கிறது. இப்போது வாய் திறக்கும் இஸ்ரோவும் சரி, உத்தரகாண்ட் மாநில வானிலை மையமும் சரி எந்தவித எச்சரிக்கையையும் விடுக்காது போகவே, கேதர்டோம் பனிச்சிகரம் மெள்ள உருகி தண்ணீரின் மட்டம் உயர்ந்தது. அதனால் அழுத்தம் உண்டாகி, சர்பால் ஏரியை உடைத்து, அதை ஒட்டிய
மந்தாகினி ஆற்றில் பேரலைகளை உருவாக்கியதாலேயே கடும் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது.இதெல்லாம் ஓரிரு நாட்களில் நடந்து விடவில்லை. ஏறத்தாழ 20 ஆண்டுகளில் நடந்திருக்கிறது. (ஆனால், வெள்ளப்பெருக்கு ஒரே நாளில் ஏற்பட்டிருக்கிறது).
இந்த பேரழிவிற்கு தாரிதேவி சிலையை இடம் மாற்றியதே காரணம் என ஒரு பத்திரிகை தலையங்கமே தீட்டியிருந்தது. கேதர்நாத் வெள்ளப்பெருக்கிற்கு இயற்கையும், தாரிதேவியும் ஒருபோதும் காரணமில்லை. கேதர்டோம் பனிச்சிகரம் உருகி ஏன் சர்பால் ஆற்றில் விழுந்தது? இமயமலையில் ஓடும் கங்கா, யமுனா ஆற்றின் துணை ஆறுகளான மந்தாகினி, அலர்நந்தா, பாகீரதி போன்ற துணை ஆறுகளின் போக்கை மாற்றி அங்கு நீர்மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக 20 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.20 ஆண்டுகளாக தொடர்ந்து நதிகளின் போக்கு மாற்றப்பட்டதால் குறிப்பிட்ட மலைச்சிகரத்தின் சீதோஷ்ணநிலை மாறுபட்டு பனிச்சிகரம் உடைந்து விழுந்திருக்கிறது. மலைப்
பாங்கான இடங்களில் கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது என்பதும், அணைக்கட்டு போன்ற நீர்நிலைகளையும் உருவாக்கக் கூடாது என்பதும் விதி. இமயமலை செல்லும் யாத்திரீகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, ஏராளமான கட்டுமானங்களும், நீர்மின் திட்டங்களும் இயற்கைக்கு முரணாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.
கட்டிடங்கள் யாவும் அஸ்திவார பலம் இழந்து ஆற்றில் சரிகிறது என்றால், அதற்கு இயற்கையா காரணம்? ஆற்றங்கரை ஓரத்தில் எந்த ஒரு விதியையும் பின்பற்றாமல் 7 மாடி கட்டிடங்களைக் கட்டுகிற பேராசைதானே காரணம்?
இந்த இயற்கை பேரிடர் வெறும் நிகழ்வு அல்ல. இது ஒரு முக்கிய அறிவிப்பு. நீலகிரி, கொடைக்கானல்,ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு உத்தரகாண்டின் ருத்ரதாண்டவம் ஒரு மௌன எச்சரிக்கை. அந்த எச்சரிக்கைக்கு நாம் பயந்தே ஆக வேண்டும்.
E.உதயகுமார்
நிர்வாகஇயக்குனர்