இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்ற காலத்திற்கு முன்பிருந்தே நமது மக்களில் சிலருக்கு ஒரு பழக்கம் இருந்து வருகிறது.அதாவது,அத்தியாவசியப் பொருளை பதுக்குவது,தட்டுப்பாட்டை உருவாக்குவது,பின் விலையேற்றி விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிப்பது.பஞ்ச காலங்களில் அரிசி,கோதுமை,சர்க்கரை போன்ற பொருட்களை பதுக்குவதை தங்களது தொழிலாகவே செய்து வந்தோர் பலர்.
அவர்களது பதுக்க வேண்டிய பொருட்கள் லிஸ்டில் பால் பவுடர் கூட இடம் பெற்றிருந்தது என்பதுதான் கொடுமை.அதன் பிறகு மாநில அரசுகள் விழித்துக்கொண்டு சாட்டையைச் சுழற்றியதாலும்,வேளாண்மை மேம்பாடு காரணமாகவும் மெல்ல அதிலிருந்து விடுபட்டோம்.
ஆனால்,பதுகுவதற்கு வாய்ப்பே இல்லாத,அவசியமே இல்லாத மற்றுமொரு அத்தியாவசியப் பொருள்தான் ஆற்று மணல்.இயற்கை அன்னை வாரி வழங்கும் இலவசப் பொருளான ஆற்று மணலையும் பதுக்கி,தட்டுப் பாட்டை உருவாக்கி,அதிக விலைக்கு சிலர் விற்று விடுகிறார்கள்.அரசு நிர்ணயித்த விலையை விட பத்து மடங்கு விலையை அதிகமாக உயர்த்தி விற்பது,அந்த விலையை கொடுத்தாலும் கூட மணலை உடனடியாக கொடுக்காமல் தண்ணீர் காட்டுவது என கயமைத்தன்மை மிக்க செயல்களால் ஒரு லோடு மணலின் விற்பனை விலை ரூ.42,000-ஆக உயர்ந்தது.(27.11.12 அன்று நிலவரப்படி)இது கிட்டத்தட்ட இரண்டு சவரன் தங்க நகையின் விலைக்கு நிகரானது.மணலில் தங்கம் இருக்கிறதா?என்று தேடியதெல்லாம் ஒரு காலம்.மணல் விலை தங்கத்தை விட உயர்ந்திருப்பது இந்த காலம்.
அரசு,தானே விற்பனை செய்வது போல் அறிவிப்பினை வெளியிட்டு.மணல் அள்ளிப் போடும் ஆட்களை காண்ட்ராக்டர் ரூபத்தில் உள்ளூர் ஆட்களுக்கு'சிறப்பு அனுமதி தந்திருக்கிறது.தற்போதைய இந்த நிலைக்கு.
முன்பு இருந்த நிலையே மேல் என்று எண்ணத்தான் தோன்றுகிறது.
ஆட்சியாளர்களிடம் சொல்லியும் பலன் இல்லை,ஆட்சியரிடம் சொல்லியும் பலனில்லை,ஊடகங்களில் புலம்பியும் பலனில்லை என்று தவிக்கிறார்கள் கட்டுமானத்துறையினர்.
இறுதியாக,வருகிற 12ஆம் தேதி போராட்டம் ஒன்றையும் நடத்தப் போகிறார்களாம்.போராட்டம்,பேரணி போன்றவற்றை பெரிதாக நடத்திதான் இந்த அரசின் கவனத்தை கவரமுடியும் என்பதைத் தவிர வேறு என்னவழி நமக்கு?
நமது மக்களுக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு.எல்லா விலையேற்றதிற்கும் கண்டனம் தெரிவிப்பார்கள்,கொடி
பிடிப்பார்கள்,கூச்சல் போடுவார்கள்.பிறகு படிப்படியாக அந்த சுமைக்கு அடிபணிந்து விடுவார்கள்.அப்படித்தான் பெட்ரோல்,டீசல்,போக்குவரத்து,பால்,மின்சாரம்,சிமெண்ட்,கேஸ் சிலிண்டர் போன்ற பலவகை கட்டண உயர்வுகளையும் நாம் பழகிக் கொண்டு விட்டோம்.அந்த வரிசையில் மணலும் இடம் பெற்றுவிட்டால் அதைவிட கட்டுமானத்துறைக்கு ஆபத்து வேறேதும் இல்லை.
மேலே சொன்ன பொருட்களின் விலையேற்றத்தில் கூட ஏதோ ஒரு வகையில் உற்பத்திச் செலவு என்கிற காரணி ஒளிந்துள்ளது.(அதற்காக அந்த விலை உயர்வை நாம் நியாயப்படுத்தவில்லை).ஆனால்,உற்பத்திச்
செலவே இல்லாத,இயற்கை நமக்கு கொடுத்த ஆற்று மணலை சுரண்டி,அநியாய விலைக்கு விற்பது எவ்வகையிலும் நியாயமற்றதாகும்.
பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் இந்த அநியாயக் கொள்ளையைத் தடுக்க நமது போராட்டம் வரை காத்திருக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க முன்வருவதுதான் தமிழக அரசின் தார்மீகப் பொறுப்பாக இருக்கும்.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Wednesday, 20 February 2013
தமிழக அரசின் தார்மீகப் பொறுப்பு -டிசம்பர்-2012
இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்ற காலத்திற்கு முன்பிருந்தே நமது மக்களில் சிலருக்கு ஒரு பழக்கம் இருந்து வருகிறது.அதாவது,அத்தியாவசியப் பொருளை பதுக்குவது,தட்டுப்பாட்டை உருவாக்குவது,பின் விலையேற்றி விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிப்பது.பஞ்ச காலங்களில் அரிசி,கோதுமை,சர்க்கரை போன்ற பொருட்களை பதுக்குவதை தங்களது தொழிலாகவே செய்து வந்தோர் பலர்.
அவர்களது பதுக்க வேண்டிய பொருட்கள் லிஸ்டில் பால் பவுடர் கூட இடம் பெற்றிருந்தது என்பதுதான் கொடுமை.அதன் பிறகு மாநில அரசுகள் விழித்துக்கொண்டு சாட்டையைச் சுழற்றியதாலும்,வேளாண்மை மேம்பாடு காரணமாகவும் மெல்ல அதிலிருந்து விடுபட்டோம்.
ஆனால்,பதுகுவதற்கு வாய்ப்பே இல்லாத,அவசியமே இல்லாத மற்றுமொரு அத்தியாவசியப் பொருள்தான் ஆற்று மணல்.இயற்கை அன்னை வாரி வழங்கும் இலவசப் பொருளான ஆற்று மணலையும் பதுக்கி,தட்டுப் பாட்டை உருவாக்கி,அதிக விலைக்கு சிலர் விற்று விடுகிறார்கள்.அரசு நிர்ணயித்த விலையை விட பத்து மடங்கு விலையை அதிகமாக உயர்த்தி விற்பது,அந்த விலையை கொடுத்தாலும் கூட மணலை உடனடியாக கொடுக்காமல் தண்ணீர் காட்டுவது என கயமைத்தன்மை மிக்க செயல்களால் ஒரு லோடு மணலின் விற்பனை விலை ரூ.42,000-ஆக உயர்ந்தது.(27.11.12 அன்று நிலவரப்படி)இது கிட்டத்தட்ட இரண்டு சவரன் தங்க நகையின் விலைக்கு நிகரானது.மணலில் தங்கம் இருக்கிறதா?என்று தேடியதெல்லாம் ஒரு காலம்.மணல் விலை தங்கத்தை விட உயர்ந்திருப்பது இந்த காலம்.
அரசு,தானே விற்பனை செய்வது போல் அறிவிப்பினை வெளியிட்டு.மணல் அள்ளிப் போடும் ஆட்களை காண்ட்ராக்டர் ரூபத்தில் உள்ளூர் ஆட்களுக்கு'சிறப்பு அனுமதி தந்திருக்கிறது.தற்போதைய இந்த நிலைக்கு.
முன்பு இருந்த நிலையே மேல் என்று எண்ணத்தான் தோன்றுகிறது.
ஆட்சியாளர்களிடம் சொல்லியும் பலன் இல்லை,ஆட்சியரிடம் சொல்லியும் பலனில்லை,ஊடகங்களில் புலம்பியும் பலனில்லை என்று தவிக்கிறார்கள் கட்டுமானத்துறையினர்.
இறுதியாக,வருகிற 12ஆம் தேதி போராட்டம் ஒன்றையும் நடத்தப் போகிறார்களாம்.போராட்டம்,பேரணி போன்றவற்றை பெரிதாக நடத்திதான் இந்த அரசின் கவனத்தை கவரமுடியும் என்பதைத் தவிர வேறு என்னவழி நமக்கு?
நமது மக்களுக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு.எல்லா விலையேற்றதிற்கும் கண்டனம் தெரிவிப்பார்கள்,கொடி
பிடிப்பார்கள்,கூச்சல் போடுவார்கள்.பிறகு படிப்படியாக அந்த சுமைக்கு அடிபணிந்து விடுவார்கள்.அப்படித்தான் பெட்ரோல்,டீசல்,போக்குவரத்து,பால்,மின்சாரம்,சிமெண்ட்,கேஸ் சிலிண்டர் போன்ற பலவகை கட்டண உயர்வுகளையும் நாம் பழகிக் கொண்டு விட்டோம்.அந்த வரிசையில் மணலும் இடம் பெற்றுவிட்டால் அதைவிட கட்டுமானத்துறைக்கு ஆபத்து வேறேதும் இல்லை.
மேலே சொன்ன பொருட்களின் விலையேற்றத்தில் கூட ஏதோ ஒரு வகையில் உற்பத்திச் செலவு என்கிற காரணி ஒளிந்துள்ளது.(அதற்காக அந்த விலை உயர்வை நாம் நியாயப்படுத்தவில்லை).ஆனால்,உற்பத்திச்
செலவே இல்லாத,இயற்கை நமக்கு கொடுத்த ஆற்று மணலை சுரண்டி,அநியாய விலைக்கு விற்பது எவ்வகையிலும் நியாயமற்றதாகும்.
பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் இந்த அநியாயக் கொள்ளையைத் தடுக்க நமது போராட்டம் வரை காத்திருக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க முன்வருவதுதான் தமிழக அரசின் தார்மீகப் பொறுப்பாக இருக்கும்.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:49
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
தடம் மாறும் ஊடகங்கள்-நவம்பர்-2012
நாட்டையும் நாட்டு மக்களையும் நெறிபடுத்த,அரசு இயந்திரங்களை நேர்படுத்த எல்லா ஜனநாயக நாடுகளிலும்,ஏன் சர்வதிகார நாடுகளிலும் கூட இருக்கிற ஒரே ஒரு வலிமையான ஆயுதம் ஊடகம் மட்டுமே.
உலகெங்கும் எத்தனையோ அநியாய அரசாங்கங்களை கவிழ்த்தும்,எண்ணிலடங்கா அக்கிரமங்களை
வெளிக் கொணர்ந்தும்,சமுதாயத்தோடு பின்னிப்பிணைந்தும் இயங்குகின்ற பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் இல்லையெனில் இந்நாடு எப்போவோ பணக்கார முதலைகளுக்கு விலை பேசப்பட்டிருக்கும்.எத்தனை அராஜகங்கள் நடந்தாலும் மக்களுக்கு இருக்கிற ஒரே ஒரு நம்பிக்கை
பத்திரிகை,தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் தான்.
உண்மையில் எல்லா மாநிலங்களிலும் எதிர் கட்சிகளாக விளங்குவதும் இவைதான்,ஊடங்கங்களின் வழிகாட்டுதல்களிலும்,பாதுகாப்பிலும் தான் ஒரு நாட்டின் ஜனநாயகம் காக்கப்படுகிறது என்பது நிதர்சனம்.
ஆனால்,மேற்கூறிய எண்ணங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக ஊடகங்கள் தவிடுபொடியாக்கி வருகின்றன என்பதை சமீப கால நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
எஸ்.எம்.எஸ் போட்டி நடத்தி பெருவாரியான மக்களிடமிருந்து பணம் பறிப்பது.மக்களை முட்டாளாக்கும் கோடிஸ்வர நிகழ்ச்சிகளை நடத்துவது.நிகழ்ச்சியில் பங்கேற்போர்களை சண்டையிட வைத்து அதன் மூலம் டி.ஆர்.பி ரேட்டினை ஏற்றுவது,நம்பகமற்ற விளம்பரங்களை ஒளிபரப்புவது அல்லது வெளியிடுவது இந்த வரிசையில் இன்னொன்றையும் சேர்த்துகொள்ளலாம்.
பிரபலமான தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை மிரட்டுவது.
இப்படி ஒரு மிரட்டலை செய்திருக்கிறது ஓர் ஊடகம்.அதன் பெயர் ஜீ.டிவி.வட இந்தியாவில் பிரபலமான அந்த சேனல் ரூ.100கோடி மதிப்பிலான விளம்பரம் கேட்டு இந்தியாவின் முக்கிய இரும்பு உருக்காலை நிறுவனமான ஜின்டால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.நவீன் ஜின்டாலை மிரட்டியிருக்கிறது.என்ற செய்தி நாடு முழுவதும் உள்ள ஊடகங்களின் மீதான் நம்பிக்கையை பெரிதும் அசைத்திருக்கிறது.
'ரூ.100கோடி விளம்பரத்தினை எங்கள் சேனலுக்கு தாருங்கள்!இன்றேல்,உங்கள் நிறுவனத்தைப் பற்றி தப்புத்
தப்பான செய்திகளை ஜீ.டிவியில் தொடர்ந்து ஒளிபரப்புவோம்' என்று நவீன் ஜின்டாலிடம் ஜி.டிவி நிறுவன அதிகாரிகள் பேரம் பேசியதை ஜின்டால் நிறுவன அதிகாரிகள் வீடியோ எடுத்து ஜீ.டிவியின் உண்மை சொரூபத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
டிவி சேனலுக்கு மட்டுமல்ல,பத்திரிகைகளுக்கும் விளம்பரம் அவசியம் தான்.ஆனால்,விளம்பரத்தைப் பெறுவதற்காகவே இவற்றை நடத்தினால் விளம்பரதாரர்களுக்கு ஆதரவாக நடுநிலைமை தவறி நடந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.ஜின்டால் நிறுவனம் உண்மையில் தவறு செய்திருந்தாலும்,செய்தியை வெளியிடாமல் இருக்க ரூ.100கோடி பணம் கொடுங்கள் என மிரட்டுவது,சாலை வழிப்பறிக்கு சமமாகும்.உண்மையில் ஜீ.டிவி மட்டுமல்ல,ஏராளமான முன்னணி சேனல்களும்,
பத்திரிகைகளும் தற்போது இந்த வியாபாரத்தைத் தான் செய்து வருகின்றனர்.அதாவது உண்மையை அறிந்துகொள்வது,பின் அதனை வெளியிடாமல் இருக்க பணம் கேட்பது.
ஊழலை தட்டிக்கேட்பதற்குதான் ஊடகங்கள் என்கிற நிலைமை மாறி ஊழல்வாதிகளிடமே பணம் கேட்டு ஊடங்கங்கள் நிற்பது ஜனநாயக நாட்டிற்கு எந்த விதத்திலும் நன்மையை தராது.
நம்முடைய பேனா தலைகுனியும் போது தான், நாட்டின் ஜனநாயகம் தலைநிமிரும்.
ஆனால் நாமே தலைகுனிந்தால்?
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:42
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
ஊழல்வாதிகளின் பணம் காய்ச்சி மரம்-அக்டோபர்-2012
உலக மக்களில் மொத்தமே இருபிரிவுகள் தான்.ஒரு பிரிவு.அதிகாரம் செய்பவர்கள்.இன்னொரு பிரிவு அதிகாரத்திற்கு ஆட்படுபவர்கள்.'அதிகாரத்தைச் செலுத்துபவர்கள்'என்ற பிரிவில் நுழைந்து எளிய மக்களை ஆட்டிப் படைக்கும் சக்திகள் எல்லாக் காலகட்டங்களிலுமே இருந்து கொண்டே தான் வருகின்றனர்.மன்னராட்சி,அன்னியர் ஆட்சி,மன்னராட்சியை விட மோசமானதோ இந்தக் குடியாட்சி? என்று நம்மை எண்ணவும் செய்கிறது.அஜாக்கிரதையாலும்,முன் யோசனை இல்லாத திட்டங்களினாலும் ஏற்படக்கூடிய பல்வேறு வகையான வருமான இழப்புகளுக்கு அதிகாரத்திற்கு அடிபணியக்கூடிய எளிய
மக்கள் தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
அண்மையில்,மத்திய அரசால் விதிக்கப்பட்ட டீசல் விலைஉயர்வு,மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர் குறைப்பு.சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தல் முதலானவற்றுக்காக,எப்பொழுதுமே பேசாத பிரதமர் மன்மோகன் சிங்,தொலைகாட்சியில் 15 நிமிடம் பேசியிருக்கிறார்.விலை உயர்வுக்கும்,அன்னிய நேரடி முதலீட்டிற்கும் சப்பைக் கட்டு கட்டிய பிரதமர் மறந்தும் கூட,அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பான ஸ்பெக்ட்ரம் 2G ஊழல் ரூ.1.76,000 கோடி பற்றியோ,122 நிலக்கரி சுரங்கங்களை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததினால் ஏற்பட்ட இழப்பு ரூ.1,86,000 கோடி பற்றியோ,வெடிக்கக் காத்திருக்கும் அடுத்த ஊழலான ரூபாய் ஆறு இலட்சம் கோடி மதிப்பிலான விண்வெளி ஸ்பெக்ட்ரம் பற்றியோ,
வாயைத் திறக்கவில்லை.இந்தப் பணமெல்லாம் ஒழுங்காக வசூலிக்கப்பட்டு,ஊழல்
அரசியல்வாதிகளின் முழு கருப்புப் பணத்தையும் வெளிக்கொணர்ந்தால்,பெட்ரோல் விலை லிட்டருக்கு.ரூ.10 ஆகவும்,வருடத்திற்கு 25 காஸ் சிலிண்டரும் கிடைக்கும்.பொருளாதார மேதையான பிரதமருக்கு இது தெரியாமலா இருக்கும்?
எளிய மக்களை நசுக்காமல் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவேண்டும் என்கிற எவ்விதமான ஆக்கபூர்வமான திட்டங்களும் இல்லாத,தனது கட்சியிலும்,கூட்டணிக் கட்சிகளிலும் உள்ள ஊழல் பேர்வழிகளைக் கட்டுப்படுத்த இயலாத நமது பிரதமர்,ஒரு புதிய விஷயத்தை நமக்கு சொல்ல முன்வந்திருக்கிறார்.பணம் மரத்தில் காய்ப்பதில்லையாம்.அதனால்,நாம் இந்த நெருக்கடியை ஏற்றுக் கொண்டுதான் தீர வேண்டுமாம்.
ஆனால்,உண்மை என்ன தெரியுமா?பணம் மரத்தில் தான் காய்க்கிறது.அந்த மரத்தின் பெயர் 'இந்தியா'.
அந்த மரத்தை விதைத்து,வளர்த்து,பராமரித்து வருவது,எந்தவித அதிகாரமும் இல்லாத எளிய இந்திய மக்கள் தான்.அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அந்த மரத்தில் காய்க்கும் பணத்தை அறுவடை செய்யும் வித்தை நன்றாகத் தெரிந்திருக்கிறது,அதை பதுக்கவும் தெரிந்திருக்கிறது.
வெகு நாட்களுக்கு முன் ஒரு தமிழகத் தலைவருக்கு பிரதமர் பதவி தேடி வந்தபோது அதை மறுத்து அவர் சொன்ன வார்த்தை:''நாட்டின் பிரதமர் என்பவர் வெறுமனே நாட்டின் அன்றாட நிர்வாகத்தை பார்த்துக் கொள்பவர் அல்லர்.பிரதமராக வருபவருக்கு ஆழ்ந்த பொருளாதார அறிவு,தொலைநோக்குப் பார்வை,உலகம் எந்த திசையில் போய்க்கொண்டிருக்கிறது?அதில் இந்தியாவை எப்படி வழி நடத்த வேண்டும்?போன்ற
சிந்தனைகள் வேண்டும்.என்னால் அது முடியாது.ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பதவி வருகிறது என்றால் அதில் போய் நாம் ஒட்டிக் கொண்டுவிடுவதா?பதவியை விட தேசம் பெரிது அல்லவா?''இப்படி சொன்னவர் ஜி.கே.மூப்பனார்.ஆனால்,அதற்குப் பின் வந்த எந்தப் பிரதமருக்கும் மூப்பனாரின் தெளிவு இருந்ததாக நாம் அறியவில்லை.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:41
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
கறுப்பு ஆகஸ்ட் -செப்டம்பர்-2012
வர வர நமது மக்கள் மோசமான கலாசாரத்திற்கும்,நடத்தைகளுக்கும் முன்னுதாரணமாக ஆகிக் கொண்டிருக்கிறார்களோ?என்ற ஐயம் வலுப் பெற்றுக் கொண்டே வருகிறது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நடந்த சில சம்பவக் கோர்வைகளை படித்துப் பார்த்தால்,அது உங்களுக்கே புரியும்.
ஆதி திராவிடர்கள் பள்ளிக்கு வருவதே பெரும்பாடு.அவர்களும் பள்ளிக்கு வந்து தடையில்லாத கல்வியைப் பெற வேண்டுமென்ற நல்ல நோக்கில் அரசினால் ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அந்த எளிய மாணவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை ஏய்த்து கொள்ளையடித்திருக்கிறார்கள்! அருவெறுப்பான இவர்கள் தலைமையாசிரியர் பதவி வகித்தார்கள் என்பது ஜீரணிக்க முடியாத ஒன்று.
நாட்டின் கிரானைட் போன்ற கனிம வளங்களை குறிப்பிட்ட அளவு மட்டும் எடுத்து நாட்டின் உள் நாட்டுத்
தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும்,உபரி கனிமங்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் அந்நிய செலாவணியைப் பெருக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.ஆனால் ஒரேயடியாக அரசையும்,மக்களையும் ஏமாற்றி,வரையறை மீறி ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான அரசின் வருமானத்தை 177 கல்குவாரி நிறுவனங்கள்'ஸ்வாகா'செய்திருக்கின்றன.இதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு என்பது வெளிப்படைச் செய்தி.
நாட்டின் இன்னொரு செல்வமான நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு முறைகேடாக ஒதுக்கியதன் மூலம் ரூ.1,86,000 கோடி இழப்பு ஏற்பட மத்திய அரசின் செயல்பாடுகளே காரணமாக இருந்திருக்கிறதாம்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை ஓவர்டேக் செய்திருக்கிறது நிலக்கரி சுரங்க ஊழல்.பிரதமர் வழக்கம் போல மெளனமாக இருக்கிறார்.
நம் மாநிலத்திற்கு தேவையான பணியாளர்களைத் தகுதி தேர்வுகள் மூலம் நியமித்துக்கொள்ளும் அமைப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.இது நடத்திய குரூப் 2 தேர்வின் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியாகிவிட்டது.இதனை வாங்குவதற்கு மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இன்டர்நெட் சென்டர்களையும்,லாட்ஜ்களையும் தேடி அலைந்திருக்கிறார்கள்.இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து
வினாத்தாளைப் பெற்றுள்ளார்கள்.நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் ஒட்டுமொத்த அரசுத் தேர்வு முறையைக் கேலிக் கூத்தாக்கியிருக்கிறது.
கடந்த ஆகஸ்டை கறுப்பு ஆகஸ்டாக மாற்றிய ஊழல் சம்பவங்கள் இவை.ஆகஸ்ட் 15 அன்று பிரதமர்
கொடியேற்றியதைத் தவிர வேறு எந்த நல்ல விஷயமும் சென்ற மாதத்தில் நடக்கவில்லை என்பது நம்மை உறைய வைக்கும் செய்தி! முதல் மூன்று விஷயங்கள் அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகள் ஆகியோர் தொடர்புடையது.ஆனால்,வினாத்தாள் விவகாரத்தில் ஊழல் செய்தது,
வேலை தேடும் இளைஞர்கள்.அதாவது மக்கள்.
ஊழல் அரசியல்வாதிகள்,நேர்மையற்ற அரசு அதிகாரிகள் தன்னொழுக்கம் இல்லாத தறிகெட்ட மக்கள்,இதுதான் இந்தியாவின் அடையாளமாக மாறிக்கொண்டிருக்கிறது.தாங்கள் வாழும் தேசத்தை பாழ்படுத்த நினைக்கும் மனித கூட்டம் பல்கிப் பெருகி வருவது கவலைக்குரியது.
''காக்கை குருவி எங்கள் ஜாதி'' என்று பாரதி என்னமோ பெருமையாகப் பாடியிருக்கலாம்.இதை காக்கை குருவிகள் தற்போது கேட்க நேர்ந்தால்,''நாங்களா உங்கள் ஜாதி?'' என நம்மை காறித்துப்பக் கூடும்.
ஏனெனில்,எந்த காக்கைக் குருவியும் ஆதிதிராவிட ஏழைக்குழந்தைகளின்
கல்வித் தொகையைக் கவர நினைப்பதில்லை.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:41
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
கேட்கவிரும்பும் ஒரே கேள்வி!-ஆகஸ்ட்-2012
1962.தமிழ்நாட்டில் பிறந்த எந்தக் குழைந்தைக்கும் 'அ' ன்னா,'ஆ' வன்னா தெரியாமல் போய்விடக் கூடாது என்று பதைபதைத்த காமராஜரின் ஆட்சிகாலம் அது.
அரசு செய்தித் தொடர்புத்துறை அதிகாரிகள் காமராஜரைப் பார்க்க வந்தார்கள்.
''ஐயா,இதுவரை நமது ஆட்சியில் செய்து வந்த சாதனைகளை பொது இடங்களிலும்,
திரை அரங்குகளிலும்,ஒளிபரப்பச் செய்யலாம்.இதன் மூலம் அரசிற்கு நற்பெயர் கிடைக்கும்'' என்றார்கள்.
காமராஜர் எவ்வளவோ மறுத்தும் அதிகாரிகள் அவரை சம்மதிக்க வைத்தார்கள்.கடைசியில் காமராஜர், ''அதற்கு எத்தனை செலவாகும்?'' என்றார்.அதிகாரிகள் தொகையைச் சொன்னார்கள்.
தொகையைக் கேட்டதும் காமராஜர்.''அட எழுந்து போங்கய்யா! அத்தனை காசு எங்கிட்ட இருந்தா நாலு பள்ளிக்கூடத்தைக் கட்டுவேன்'' என்றார்.
தனது சிந்தை,நாடி,நரம்பு,இரத்தம் அனைத்திலும் சேவை என்ற அந்த ஒற்றை வார்த்தை தவிர,வேறு அறியாத அவர் போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டில் ஏனோ உருவாகவில்லை.கல்வித்தந்தை என நாம் அழைக்கும் அவரது படம் எல்லா அரசு அலுவலகங்களிலும் உண்டு.
ஆனால் அரசின் எந்த செயல்பாடுகளிலும் காமராஜரின் வாசமில்லை.
அண்மையில் தாம்பரத்தைச் சேர்ந்த பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமி,பள்ளியின் பேருந்தில் வீட்டிற்கு
திரும்பும்போது,பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து,அதே பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறாள்.சிறுமி இறந்ததைப் பார்த்த பொதுமக்கள் ஓட்டுநரை நையப்புடைத்ததுடன் பேருந்தையும் எரித்திருக்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட சியோன் பள்ளி முதல்வரைக் கேட்டபோது 'இது எங்களுக்கு சொந்தமான பேருந்தே அல்ல'
என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்.தாம்பரம் ஆர்.டி.ஓ.அலுவலரைக் கேட்டால்,'பஸ்ஸில் ஓட்டை இருந்தது என்று யார் சொன்னது?ஓட்டை இருந்தால் நாங்கள் சான்றிதழ் கொடுத்திருக்க மாட்டோமே! என்கிறார்.அப்படியெனில்,எஃப்.சி.பெற்ற ஒரே மாதத்தில் இவ்வளவு பெரிய
ஓட்டை திடீரென விழுந்துவிட்டதா? என நமக்குத் தெரியவில்லை.இந்த ஆர்.டி.ஓ.அலுவலரையும்,பள்ளி தாளாளரையும் கூப்பிட்டு வெளுத்து வாங்குவதற்கு பள்ளிக்குழந்தைகளின்பாற் உயிரையே வைத்திருந்த காமராஜர் போன்ற தலைவர்கள் இப்போது இல்லை.
இலாப நோக்கு இல்லாத,சேவை மனப்பான்மையோடு செய்யக்கூடிய தொழில்களை அரசு முன்னுரிமை
எடுத்துக் கொண்டு நடத்துவதுதான் அனைத்து நாடுகளிலும் மரபு.ஆனால்,நம் நாட்டில் சாராயத்தைக் காய்ச்சி
விற்கும் தொழிலை அரசு ஏற்றுக் கொண்டது. வருங்கால சந்ததியினரை உருவாக்க,நம் நாட்டில் இருக்கின்ற ஒரே ஒரு வாய்ப்பான கல்விக் கூடங்கள் தனியார் வசம் வந்துவிட்டது.
அதன் விளைவுகளின் ஒரு சிறுதுளி தான் இந்த சிறுமியின் மரணம்.
நாம் இங்கு யாரையும் தனித்தனியாக பல்வேறு கேள்விக் கணைகளை தொடுக்கப் போவதில்லை.
ஒரே ஒரு கேள்விதான் கேட்க விரும்புகிறோம்.
ஒரு குழந்தை விழக்கூடிய அளவிற்கு ஓட்டை இருந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநரையும்,
பேருந்துக் கட்டணம் என்று ஆண்டுதோறும் ஒரு பெரிய தொகையை வாங்கி வைத்துக் கொண்டதோடு
அந்தப் பேருந்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று,தப்பித்துக்கொள்ள நினைக்கும் அந்த பள்ளி முதல்வரையும்,தனது பேருந்து எந்த நிலையில் இருக்கிறது என்பதைக்கூட அறியாத முதலாளியையும்,நாங்கள் எஃப்.சி வழங்கும் போது அந்த ஓட்டை இல்லை என(பேருந்து எரிந்துவிட்டதால் ஓட்டை தெரியவா போகிறது?)சொல்லும் தாம்பரம் ஆர்.டி.ஓ .அலுவலரையும்,நாம் கேட்க விரும்பும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
''இறந்து போன அந்தக் குட்டி தேவதை ஸ்ருதி ஒருவேளை உங்கள் குழந்தையாக இருந்தால் நீங்கள் இந்த பதில் தான் சொல்வீர்களா?''
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:41
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
நாமாவது வெட்கப்படுவோம்-ஜூலை-2012
நாட்டில் பிரதமர் பதவிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளாக இராணுவத்துறை,நீதித்துறை மற்றும் உள்துறை ஆகிய பதவிகளைக்குறிப்பிடலாம்.(இதுவரை சிறந்த தலைவர்கள் அந்த பதவிகளில் உட்காரவில்லை என்பது வேறு விஷயம்)இவற்றுள் உள்துறையின் பங்கு முக்கியமானது.நாட்டிற்கு அண்டை நாடுகளுடனான வெளியுறவும்,எல்லைக் காவலும் எத்தனை முக்கியமோ,அத்தனை முக்கியம் உள்துறைக்கும் உண்டு.உள்துறை அமைச்சராக இருப்பது வெறும் உயர்ந்த பதவி மட்டுமல்ல ,ஒரு உன்னதமான பொறுப்பும் கூட.நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பணி.
அந்தப் பணிக்கு புத்திக்கூர்மை,உடனடிச் செயல்வேகம்,பல்வேறு மாநிலங்களின் அரசு அதிகாரிகளைப் பற்றிய அறிவு.மக்களின் வாழ்வு நிலை,கலாச்சாரம்,மதப்பிரிவினை ஆகியவற்றைப் பற்றிய தேர்ந்த ஞானம்,நமது உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் வெளிநாடுகளின் சக்தியை கண்டறியும் திறன்,இவையெல்லாவற்றையும் விட 100 சதவீத நேர்மை ஆகியன அவசியம் இருக்க வேண்டும்.
நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு இதெல்லாம் இருக்கிறதா?என்று ஆராய்வது நமது தலையங்கத்தின் நோக்கமல்ல.
குறைந்தபட்சம் தாம் தேர்ந்தெடுக்கப்பட்ட விதத்தினை பற்றிய விமர்சனங்களும்,ஐயங்களும் எழும் போது,அவற்றை நேர்கொள்வது தான் உள்துறை அமைச்சரின் குறைந்தபட்ச நேர்மையாக இருக்கமுடியும்.தாம் தில்லுமுல்லு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கை எதிர்கொள்ள அச்சப்பட்டு,பலமுறை காலம் தாழ்த்தி,இறுதியாக இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று,ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார்,ஆனால் உயர்நீதிமன்றம்,அவருடைய மனுவை தள்ளுபடி செய்து,'வழக்கை சந்தித்தே தீரவேண்டும்' என்று உத்தரவிட்டிருக்கிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை மோசடி,ஏர்செல் மாக்ஸிஸ் ஒப்பந்த ஊழல்,இவற்றுடன் இப்போது தேர்தல் தில்லுமுல்லு என வரிசையாக குற்றச்சாட்டுகள் ப.சிதம்பரம் மீது இருந்தும் பிரதமர் மௌனமாகத்தான் இருக்கிறார்.ப.சிதம்பரமோ,'15வது லோக்சபாவில் உள்ள உறுப்பினர்கள் மீது இதுபோன்று 111 தேர்தல் வழக்குகள் உள்ளன.இந்நிலையில் நான் மட்டும் ஏன் பதவி விலக வேண்டும்?''
என்று நம்மை திருப்பி கேள்வி கேட்கிறார்.யார் என்ன சொன்னாலும் சரி,தான் ஜெயித்தாலும் தோற்றாலும் சரி,பதவியில் ஒட்டிக்கொள்ள முயலுவதே தனது முதல் பணியாக எண்ணுபவர்தாம் நமது உள்துறை அமைச்சர்.
அமெரிக்காவில் கடந்த மாதம் 16ம் தேதி லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஒபாமா அமைச்சரவையின் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த ஜான் பிரைசன் என்பவர் காரை ஓட்டிச் செல்லும் போது அருகில் இருந்த காரின் மீது இடித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.மறுநாளே பத்திரிகைகளில், 'காரை இடித்துவிட்டு
நாகரீகத்திற்காகக் கூட மன்னிப்புக் கேட்காமல் சென்றுவிட்டார் மந்திரி' என்று செய்திகள் வெளியாயின.
நம்ம ஊர் மந்தியாக இருந்திருந்தால்,பேப்பரை தூக்கிப் போட்டுவிட்டு சிரித்துக் கொண்டே போயிருப்பார்.
அமெரிக்க மந்திரியாயிற்றே,அடுத்த நாளே அவமானம் தாங்காமல் இராஜினாமா செய்துவிட்டார்.
நமது நாகரீகமும்,அரசியலும் உச்சாணிக் கொம்பில் கொடிகட்டிப் பறந்தபோது மனிதர்களே இல்லாத
நிலப் பகுதிதான் அமெரிக்கா.ஆனால்,இப்பொழுது அவர்களது அரசியலையும்,நாகரீகத்தையும் பார்த்து நாம் வெட்கப்பட வேண்டி இருக்கிறது.
அதற்கு காரணம் நமது தலைவர்கள்.
E.உதயகுமார்,நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:40
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
மாட்டு வண்டிக்காரனும் மத்திய அரசும்!ஜூன்-2012
பொதியேற்றும் மாட்டு வண்டிக்காரர்கள் அடிக்கடி செய்யும் காரியம் ஒன்று இருக்கிறது.அது,மாட்டின் கண்களில் படும்படி பத்து மூட்டைகளை வண்டியில் ஏற்றுவார்கள்.பிறகு,மாடு வண்டி இழுக்க முரண்டு பிடிக்கும் போது இரண்டு மூட்டைகளை இறக்கிவிடுவார்கள்.மாடும் பாரம் குறைந்ததென்று உற்சாகமாக வண்டியிழுக்கும்(உண்மையில் அவர்கள் ஏற்ற வேண்டியது எட்டு மூட்டைகள் தான் மீதி இரண்டும் டம்மி)
நாட்டின் பொருளாதார சூழலின் அடிப்படைக் காரணியாக விளங்கும் பெட்ரோலை,லிட்டருக்கு 7.54 ரூபாய் ஏற்றிவிட்டு 2.50 ரூபாய் குறைக்கப் போவதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.(இந்த இதழை நீங்கள்
படிக்கும் போது அநேகமாக இரண்டு மூட்டை இறங்கியிருக்கலாம் .ஸாரி,இரண்டு ரூபாய் குறைந்திருக்கலாம்).ஒரு மாட்டுவண்டிக்காரனின் சாமர்த்தியத்தோடு செயல்பட்டு வரும் மத்திய அரசை எத்தனை பாராட்டினாலும் தகும்.
ஒரு முறை இரு முறை அல்ல.மன்மோகன்சிங் அரசு ஆட்சிக்கு வந்து பதினோராவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருகிறது.தினமும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கோடிகணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக மத்திய அரசு வழக்கமான பாட்டையே பாடி வருகிறது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏன் நஷ்டம் ஏற்படுகிறது?நிச்சயம் அதற்க்கு வாய்ப்பில்லை.
கச்சா எண்ணெயின் தற்போதைய விலை பீப்பாய் ஒன்றுக்கு (160 லிட்டர்)105 அமெரிக்க டாலர்கள்.அதாவது ரூ.5,775.ஆக,ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் விலை ரூ.36.09 தான்.இவற்றோடு சுத்திகரிப்பு செலவு ரூ.0.52,மூலதனச் செலவு ரூ.6.00,போக்குவரத்துச் செலவு ரூ.6.00,முகவர் கழிவு ரூ.1.05 என எல்லாவற்றையும் சேர்த்தால் கூட,ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.49.66 தான் ஆகிறது.
இந்த லட்சணத்தில்,பெட்ரோலுக்கு மானியம் தருகிறோம் என்று மாய்ந்து,மாய்ந்து பேசுகிறார்கள்.மானியம்
கிடக்கட்டும்,அரசு கூடுதல் வரிகள் போடாமல் இருந்தால் போதாதா?மத்திய அரசு சுங்க வரி,உற்பத்தி வரி என்று ஒரு புறமும்,மாநில அரசு விற்பனை வரி,மதிப்பு கூட்டு வரி என்று இன்னொருபுறமும் போட்டுத் தாக்க,
ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.77.53க்கு வந்து நிற்கிறது.இப்படி ஒரு கடுமையான விலை உயர்வை
இந்திய மக்கள் கேள்விப்பட்டதில்லை.மறுநாள் முதல் விலை உயர்வு என கேள்விப்பட்டதும்,முதல்நாளே நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நின்று.முடிந்த வரையில் வாகனங்களில் பெட்ரோலை நிரப்பிக் கொள்வதுதான் நமது அதிகபட்ச சாமர்த்தியம்.
ஒரு பெரிய கோட்டின் அருகே.இன்னொரு பெரிய கோட்டைக் கிழித்து முந்தைய கோட்டை சிறியதாகக் காட்டுவது போல,இந்த விலை உயர்வை விட இன்னும் கடுமையான விலை உயர்வு வரும்.ஒரு லிட்டருக்கு ரூ.25,ரூ.30 என்று விலை ஏற்றி,சில பல பேச்சுவார்த்தைக்குப் பிறகு,ரூ.2 குறைக்கக் கூடும்.அப்போது நாம் அமைதியாகவே இருப்போம்.முடிந்தவரை அன்று மட்டும் டேங்கை நிரப்பிக்கொள்வோம்.
நாம் மாடுகளாக இருக்கும் வரை மத்திய அரசு மாட்டு வண்டிக்காரனாகத்தான் இருக்கும்.மாற்றமிருக்காது.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:40
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Subscribe to:
Posts (Atom)