ஜனவரி-15,பொங்கல் தினத்தில் தமிழ்நாடே சோகத்தில் மூழ்கி விட்டது.மகர விளக்கு பூஜை விழாவின் கூட்ட நெரிசலில் 106 பேர் சிக்கி சின்னாபின்னமாயினர்.நெஞ்சுக் கிழிந்து,குடல் சரிந்து கறுப்பு உடையிலும்,காவி உடையிலும் சன்னதிக்கு அருகே சரணம் ஆகிப்போயினர்.
மகாமக திருவிழா கண்ட தமிழனுக்கு இது பழகிப்போன ஒன்று என்பதால்,தமிழக அரசோ வழக்கம்போல் தலைக்கு சில லட்சங்கள் வழங்குவதாய் அறிவித்தது.தேர்தல் நெருங்குகையில் அது இன்னும் அதிகரிக்கவும் கூடும்.கேரள அமைச்சகமும்,நீதிமன்றமும் இணைந்து விசாரணை கமிஷன் நாடகத்தை அரங்கேற்ற ஒப்புக் கொண்டன.
இந்த 106பேரில் தமிழ்நாடு எத்தனை பேர்?ஆந்திரா எத்தனை பேர்?என பத்தி பிரித்து எழுதின பத்திரிகைகள்.
மகரஜோதி மனிதர்கள் ஏற்றுவதா?அல்லது ஓவர் டைமில் கடவுள் ஏற்றுவதா?என்று மைக் பிடித்து பேசின தொலைக்காட்சி சேனல்கள்,சிலர் விளக்குகள் இல்லை என்றனர்,சிலர் வாகனங்களின் தொல்லை என்றனர்.சிலர் காவலர்கள் இல்லை என்றனர்,குறுக்கு வழியில் கடவுளை பார்க்கப் போனதால் வந்த வினை என்று பக்தர்களை பரிகாசம் செய்தனர்.
ஆனால்,இத்தனை துயரத்திற்கும் பெரிதாக ஒரு காரணம் இருக்கிறது.அதுதான் உள்கட்டமைப்பு,நகரத்திற்கும் சரி,கிராமத்திற்கும் சரி,ஆள் அரவற்றமற்ற நடுக்காட்டிற்க்கும் சரி,அந்தந்த இடத்தின் தேவைக்கேற்ப,பயன்பாட்டிற்கேற்ப உள்கட்டமைப்பு இல்லை என்றால் இப்படிப்பட்ட விபரீதங்கள் தான் தலை விரித்தாடும் என்பதற்கு மகரஜோதி சம்பவம் ஓர் சாட்சி.அது மகரஜோதி திருவிழா என்றாலும் சரி,மகா சிவராத்திரி திருவிழா என்றாலும் சரி,பொன்னியம்மன் மேடோ,பம்பை நதியோ,தகுதியான உள்கட்டமைப்பு களை ஏற்படுத்த கேரள அரசு முயற்சிக்க வேண்டும் என்பதைத்தான் இந்த 106 பேர்கள் சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு,பத்து லட்சம் பேர் கூடும் மெக்கா யாத்திரையில் சாத்தான் மீது கல்லெறியும் சடங்கில் கூட இதுபோன்ற உயிரிழப்பு சம்பவம் நடந்தது.ஆனால் அந்நாட்டு நிர்வாகம் விழித்துக்கொண்டு
பாதசாரிகளுக்கென்று ஒரு பாலத்தை அமைத்துக் கொடுத்தது.
உலகிலேயே மனிதர்கள் நடந்து செல்வதற்காக பாலம் அமைக்கப்பட்டது அநேகமாக இங்குதான் இருக்கும்.
ஒவ்வொரு பகுதியிலிருந்து வருபவர்களுக்கும்,கல்லெறிந்து விட்டு திரும்புபவர்களுக்கும் தனித்தனியே ஏராளமான பாதைகளும்,பாலங்களும் உருவாக்கினர்.
பல லட்சம் மக்கள் அங்கு கூடினாலும் அங்கு எவ்வித பதைபதைப்பும் கிடையாது,ஏனெனில்,அங்கு கட்டுமானங்களை விட யாத்ரீகர்களின் ஒழுக்கங்கள் வலுவானவை.மெக்காவும்,மெக்காவிற்கு செல்லும் மக்களும் பாடம் கற்றுக்கொண்டனர்.
நாம் எப்போது கற்றுக் கொள்ளப் போகிறோம்?
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
0 comments:
Post a Comment