இத்தனை சீக்கிரமாக ஆளும் கட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பது நாகரிகம் இல்லைதான்.ஆனால்,
கடந்த முறை இதே அரசின் பிடிவாத செயல்பாடுகளால் இன்னலுற்ற நமக்கு சமீபகாலமாக தோன்றியிருக்கும் சில ஐயப்பாடுகளை யாரிடம் போய் கேட்க..
புதிய சட்டசபைக் கட்டிடத்திற்கு ஏன் குடிபோகவில்லை என்கிற வழக்கமான கேள்வியை
நாம் கேட்கப் போவதில்லை,ஏனெனில்,அதற்கு தான்,'இன்னும் கட்டுமானப் பணிகள் முடியவில்லை.இரண்டு ஆண்டுகள் கழித்து பணிகள் நிறைவுற்ற பிறகு,புதிய கட்டிடத்தில் சட்டசபை அலுவல்கள் நடைபெறும்'
என பொருத்தமான பதிலை முதல்வர் கூறியிருக்கிறாரே.
நம்முடைய பயமெல்லாம் இதே போன்ற பொருத்தமான பதில்களைச் சொல்லியே கடந்த அரசு கொண்டுவந்த
சில உருப்படியான திட்டங்கள் கூட முற்றுப் பெற்றுவிடுமோ என்பதுதான்.
தி.மு.க அரசு அடிக்கல் நாட்டியது என்பதற்காக,பெரம்பூர் மேம்பாலத்தின் அடுத்தக்கட்டப் பணிகளை
ஒரு அங்குலம் கூட நகராமல் பார்த்துக் கொண்ட இந்த அரசின் கடந்த செயல்பாடுகள் நம்மை பயமுறுத்துவதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது? (மேம்பால கட்டுமானப்பணி பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக எத்தனை ஆயிரம் மக்கள் அந்த 5 ஆண்டு காலம்
அல்லல்பட்டார்கள் என்பதை நாம் அறிவோம்).
புதிய அரசின் தேர்வுக்குப் பிறகு சமீபகாலமாக,தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த பல கட்டுமானப் பணிகள் சுணங்கிப் போயிருப்பதாக வெளிவரும் தகவல்கள் இன்னமும் நம்மை அச்சம் கொள்ளச் செய்கின்றன.சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் அதற்கு ஓர் உதாரணம்.மேலும்,காப்பீடு திட்டம்,இலவச கான்கிரிட் வீடுகள் வழங்கும் திட்டம் போன்ற ஏழைமக்களின் நலவாழ்வுத் திட்டங்களின் வருங்காலம்
எப்படி இருக்கும்?அவற்றைப் பற்றிய அரசின் நிலைப்பாடு என்ன?என்பதைக் கூட இன்னும் தமிழக அரசு தெளிவாக அறிவிக்கக் காணோம்.
உடனுக்குடன்,அரசியல் காட்சிகள் வெகுவேகமாக மாறும் நமது மாநிலத்தில்,திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியவர்தான்,திறப்பு விழா வரை வந்து முடிக்க வேண்டும் என்பது இயலாத காரியம்.முந்தைய அரசின் திட்டங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் கூட அவற்றைத் திருத்தி இன்னமும் விரைவாக நிறைவேற்ற முயல்வதுதான் மக்கள் நலன் விரும்பும் அரசின் செயல்பாடாக இருக்கும்.
கல்வெட்டில் யார் பெயரைப் பதிப்பது?எந்தெந்த திட்டங்களுக்கு யார் யார் பெயரை வைத்துக்கொள்வது?போன்ற ஈகோ பிரச்சனைகளுக்கு இடம் அளிக்காத பெருந்தன்மையான அரசைத்தான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.அண்ணன் போட்ட சட்டையை,தம்பி.'போட மாட்டேன்!' என அடம் பிடிப்பது குழந்தைகளுக்கு வேண்டுமானால் விளையாட்டாக இருக்கும்.மாநில தலைவர்களுக்கு அல்ல.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
0 comments:
Post a Comment