காலை 11 மணிக்கு துவங்கி மதியம் 3 மணிக்கு முடிந்து போகும் முதல்வர்களின்,சென்னைக் கடற்கரை தமாஷ் உண்ணாவிரதங்கள் மட்டுமே அறிந்த நமக்கு அன்னா ஹசாரேவும் புதுசு.அவரது உண்ணாவிரதமும் புதுசு.'ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளையும்,அரசியல்வாதிகளையும் லோக்பால் மசோதா விசாரணையின் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும்,அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும்.அவர்களின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யவேண்டும்'என்று தனி மனிதனாக சப்பனமிட்டு அமர்ந்து,உண்ணாவிரதத்தைத் தொடங்கிய அன்னா ஹசாரேவுக்கு இன்று ஆதரவாளர்களின் எண்ணிக்கை பல கோடிகளைக் கடந்துவிட்டது.
ரூ.1லட்சத்து 76,000 கோடியை விழுங்கிவிட்டு ராஜினாமா செய்யக்கூட முன்வராத மனசாட்சியற்ற அரசியல்வாதிகள் இருக்கும் இந்த தேசத்தில் அன்னா ஹசாரேக்களை வளர விடுவார்களா?.அவர் மீது 2.20 லட்சம் அறக்கட்டளை மோசடி,உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுப்பு.சிறையில் அடைப்பு,போராட்டத்தில் வன்முறையாளர்கள் ஊடுருவல் என்று ஹசாரேவின் அறப்போராட்டத்தையும்,ஆதரவாளர்களையும் கலைக்கப் பார்த்தது டில்லி அரசு.
300 ரூபாய்க்கும்,இரண்டு பொட்டலம் சிக்கன் பிரியாணிக்கும் வந்திருந்த கூட்டம் எனில்,அது எப்போதோ சிதறியிருக்கும்,தாய்த்திருநாட்டினை கருப்புப்பண முதலைகளிடமிருந்து காக்கும் கடைசி முயற்சிக்கு களம்புகுந்த கூட்டம் அல்லவா?அங்குலம் கூட அசைக்க முடியவில்லை.
ஒரு சாதாரண குடிமகனுக்கு ஹசாரேவின் போராட்டம் புரியாமல் போகட்டும்.(அப்படிதானே அவனுக்கு ஸ்பெக்ட்ரம் 3ஜி ஊழல் புரியாமல் போனது?)ஆனால்,'ஊழல்வாதிகளின் சொத்துக்களை கையகப்படுத்தவேண்டும்'என சொல்லும் ஹசாரே வார்த்தைகளின் பொருள் என்ன தெரியுமா?வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரூ.1,456 லட்சம் கோடி,இந்தியாவிற்கு திரும்ப வரும் என்பதுதான்.
'அத்தனை பணமும் திரும்பி வந்தால் என்ன நடக்கும்?'என அண்மையில் செல்போன் மூலம் உலவிய ஒரு குறுஞ்செய்தி நாட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இந்தியா,பொருளாதாரத்தில் நெ.1 நாடாகத் திகழும்.டாலர்,யூரோக்கள் இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிடப்படும்,இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.60,000 கோடியும், ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ.100 கோடியும் கிடைக்கும்.அடுத்த 20 ஆண்டுகளில்,நாம் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.பெட்ரோல் ரூ.25ம்,டீசல் ரூ.15ம்,பால் ரூ.8 ஆகவும் குறையும்.இதுதான் அந்த குறுஞ்செய்தி தந்த தகவல்.
ஊழலுக்கு எதிராய் போராட இந்த தருணத்தை விட்டால்,அடுத்த தருணத்திற்கு நாம் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.இல்லை அடுத்த தருணமே வாய்க்காது போகும்.
அன்னா ஹசாரே சொன்னதுபோல இது இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டம்.உண்மையில் நாம் தேசப்பற்றுள்ள இந்தியனாய் இருந்தால்,இந்த ஊழலுக்கு எதிரான சுதந்திர போராட்டத்திற்கு நம் கரங்களை உயர்த்தி ஒருமுறையாவது அன்னா ஹசாரேவிற்கு ஜே சொல்லி ஆகவேண்டும்.
பிற ஊழல்வாதிகள் அதற்கு பதில் சொல்லி ஆகவேண்டும்.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
0 comments:
Post a Comment