Tuesday, 30 July 2013

உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை!


கடந்த இரு வாரங்களாக எல்லா ஊடகங்களையும் உத்தரகாண்டின்மழை வெள்ளமும், நிலச்சரிவும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.மலை, பள்ளத்தாக்குகளின் இடுக்குகளிலும், மரக்கிளைகளிலும், இரவா? பகலா? எதுவென்று தெரியாமல் கூட்டம் கூட்டமாக ஒதுங்கியிருந்த மக்கள் தங்களை மீட்க எப்போது, யார் வருவார்கள் என்று காலத்தைக் கழித்த கொடுமையான தருணங்களை எல்லா ஊடகங்களும் ஒளிபரப்பு செய்தன. ஏறத்தாழ 1500 கி.மீ. சாலைகளைக் காணவில்லை. 104 பாலங்கள் உருக்குலைந்து போய்விட்டன. 2000 கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. 700க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஜலசமாதி அடைந்துவிட்டன. இறந்தவர்கள் 15,000 பேர்களா? அதற்கும் மேலா? முற்ஷூலும் தெரியவில்லை. ஆற்றின் குறுக்கேயும், ஓரமாகவும் ஏராளமான கட்டுமானங்களை உருவாக்கியவர்களுக்குத் தெரியாது இப்படி ஒரு மழையும், மலைச்சுனாமியும் வருமென்று. உண்மையில் உத்தரகாண்டில் பூகோள ரீதியாக இப்படி ஒரு மழை பொழிவதற்கு வாய்ப்பு இல்லை. கடந்த 300 ஆண்டுகளாக எந்த மழை வெள்ளத்தாலும் அடித்துச் செல்லப்படாத ஆதிசங்கரர் சமாதி இப்போது இல்லை என்பதே அதற்கு சாட்சி. இதற்கு மழை மட்டுமே காரணமில்லை. கேதர்நாத்தின் மூன்று பக்கங்களில் மேற்குப்புறம் இருந்த கேதர்டோம் என்கிற பனிச்சிகரம் உடைந்து அருகிலிருந்த சர்பால் ஏரியில் மூழ்கியிருக்கிறது. இப்போது வாய் திறக்கும் இஸ்ரோவும் சரி, உத்தரகாண்ட் மாநில வானிலை மையமும் சரி எந்தவித எச்சரிக்கையையும் விடுக்காது போகவே, கேதர்டோம் பனிச்சிகரம் மெள்ள உருகி தண்ணீரின் மட்டம் உயர்ந்தது. அதனால் அழுத்தம் உண்டாகி, சர்பால் ஏரியை உடைத்து, அதை ஒட்டிய மந்தாகினி ஆற்றில் பேரலைகளை உருவாக்கியதாலேயே கடும் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது.இதெல்லாம் ஓரிரு நாட்களில் நடந்து விடவில்லை. ஏறத்தாழ 20 ஆண்டுகளில் நடந்திருக்கிறது. (ஆனால், வெள்ளப்பெருக்கு ஒரே நாளில் ஏற்பட்டிருக்கிறது). இந்த பேரழிவிற்கு தாரிதேவி சிலையை இடம் மாற்றியதே காரணம் என ஒரு பத்திரிகை தலையங்கமே தீட்டியிருந்தது. கேதர்நாத் வெள்ளப்பெருக்கிற்கு இயற்கையும், தாரிதேவியும் ஒருபோதும் காரணமில்லை. கேதர்டோம் பனிச்சிகரம் உருகி ஏன் சர்பால் ஆற்றில் விழுந்தது? இமயமலையில் ஓடும் கங்கா, யமுனா ஆற்றின் துணை ஆறுகளான மந்தாகினி, அலர்நந்தா, பாகீரதி போன்ற துணை ஆறுகளின் போக்கை மாற்றி அங்கு நீர்மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக 20 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.20 ஆண்டுகளாக தொடர்ந்து நதிகளின் போக்கு மாற்றப்பட்டதால் குறிப்பிட்ட மலைச்சிகரத்தின் சீதோஷ்ணநிலை மாறுபட்டு பனிச்சிகரம் உடைந்து விழுந்திருக்கிறது. மலைப் பாங்கான இடங்களில் கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது என்பதும், அணைக்கட்டு போன்ற நீர்நிலைகளையும் உருவாக்கக் கூடாது என்பதும் விதி. இமயமலை செல்லும் யாத்திரீகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, ஏராளமான கட்டுமானங்களும், நீர்மின் திட்டங்களும் இயற்கைக்கு முரணாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கட்டிடங்கள் யாவும் அஸ்திவார பலம் இழந்து ஆற்றில் சரிகிறது என்றால், அதற்கு இயற்கையா காரணம்? ஆற்றங்கரை ஓரத்தில் எந்த ஒரு விதியையும் பின்பற்றாமல் 7 மாடி கட்டிடங்களைக் கட்டுகிற பேராசைதானே காரணம்? இந்த இயற்கை பேரிடர் வெறும் நிகழ்வு அல்ல. இது ஒரு முக்கிய அறிவிப்பு. நீலகிரி, கொடைக்கானல்,ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு உத்தரகாண்டின் ருத்ரதாண்டவம் ஒரு மௌன எச்சரிக்கை. அந்த எச்சரிக்கைக்கு நாம் பயந்தே ஆக வேண்டும். E.உதயகுமார் நிர்வாகஇயக்குனர்

வேண்டாம் ஐ.பி.எல்.போதை!


தற்போதைய சீன பிரதமர் லீகியாங்கின் இந்திய வருகையின்போது தனியார் டிவி நிருபர் ஒருவர் சம்பந்தமில்லாத ஒரு கேள்வியை அவரிடம் கேட்டார். “சீனாவில் இனியாவது கிரிக்கெட் விளையாடப்படுமா?” என்பதுதான் அது. அதற்கு லீகியாங் சொன்ன பதில் “ஒரு போதும் இல்லை. நாங்கள் ஒரு நாளில் சிறு பகுதியைத்தான் விளையாட்டிற்கென எடுத்துக் கொள்வோமே தவிர, ஒரு நாளையே விளையாட்டிற்காக எடுத்துக் கொள்வதில்லை. அதுவும், இங்கு மாதக் கணக்குகளில் கிரிக்கெட் ஆடுவதையும், அதற்காக கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் நேரத்தை அர்ப்பணிப்பதையும் பார்த்தால் எனக்கு ஆச்சரியமும், பரிதாபமும்தான் ஏற்படுகிறது” என்றார். சீனாவிற்கும், இந்தியாவிற்கும் உள்ள பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் கணக்கிட்டால், நம்மால் சீனாவை எட்டிப் பிடிக்க முடியாது என்கிறார்கள். ஒரு வேளை சீனப் பிரதமர் லீகியாங் போன்ற தெளிவான சிந்தனை உடைய சீனத் தலைவர்கள் அதற்குக் காரணமாக இருக்கலாம். சிக்ஸர்களுக்காக எழுந்த இந்திய இளைஞர்களின் கைத்தட்டல்களில் லீகியாங் சொன்ன பதில் ஒருவேளை இந்திய ஊடகங்களில் அமிழ்ந்து போயிருக்கலாம். ஆனால், ஐ.பி.எல் ன் நிஜம் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. ஐ.பி.எல். தொடரைப் பொறுத்தவரை, கலாச்சார சீரழிவு, ஆபாச நடனம், மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் போன்ற அப்பட்டமான விளைவுகளை மட்டுமே நாம் அறிகிறோம். ஐ.பி.எல். தொடர் ஏற்படுத்தும் மறைமுக எதிர்வினைகள் பற்றி நாம் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. ஐ.பி.எல். தொடர் நடைபெறும் இந்த இருமாத காலங்களில் ஈயடிக்கும் வணிகத்துறைகள் ஏராளம். திரையரங்குகள், வணிக வளாகங்கள், கண்காட்சிகள், தீம் பார்க்குகள், நூலகங்கள், அறிவியல் கருத்தரங்குகள் போன்ற எல்லா துறைகளுமே நலிந்து விடுகின்றன. கோடைக்கால விடுமுறையை மாணவர்களை பயனுள்ள வகையில் கழிக்க விடாமல் செய்யும் இந்த ஐ.பி.எல். தொடர் இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின் ஆக்கபூர்வமான நேரத்தையும் எடுத்துக் கொள்கிறது. பின்னிரவு வரை நடைபெறும் ஆட்டத்தால் மக்களின் மறுநாளைய பணிகள் சீர் குலைகின்றன. சேலத்தில் ஐ.பி.எல். மேட்சைப் பார்க்க கணவனுக்கும், மெகா சீரியலைப் பார்க்க விரும்பிய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் விரக்தி அடைந்த மனைவி மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீக்குளித்து இறந்து போன செய்தி கூட யாருக்கும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு சில தனியார் அமைப்புகள் கோடி கோடியாக கொள்ளையடிப்பதற்காக, ஒட்டுமொத்த நாட்டு மக்களையே ஆண்டுதோறும் இரு மாத காலம் ஐ.பி.எல். லுக்கு அடிமையாக்கி சுரண்டுவது அதர்மம் மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் கூட. சினிமா மற்றும் டாஸ்மாக் போதையில் அகப்படாதிருந்த வெகு சில இளைஞர்கள் கூட இந்த ஐ.பி.எல். போதைக்குள் அகப்பட்டுக்கொண்டிருப்பது நிச்சயம் நாட்டுக்கு நல்லதல்ல. சுவாமி விவேகானந்தரும், டாக்டர் அப்துல்கலாமும் பெருமதிப்பு வைத்திருக்கிற இந்திய இளைஞர்களை குட்டிச்சுவராக்கும் எந்த போதையையும், அது கிரிக்கெட்டாக இருந்தாலும் நாம் அனுமதிக்கக்கூடாது. E.உதயகுமார் நிர்வாகஇயக்குனர்

தாய்மை கலந்த கடமை!


நுண்ணறிவு,நேர்மை, வீரம், அர்ப்பணிப்பு, சமயோசிதம், செயலாற்றும் திறன், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இவையெல்லாம் காவல் துறையினருக்கு அவசியம் தேவை எனச் சொன்ன அஷூஞர் அண்ணா சொல்லாமல் விடுத்த காவல்துறைக்குத் தேவையான இன்னொரு குணம் தாய்மை. தாய்மைக்கும், கடமைக்கும் என்ன தொடர்பு என கேள்வி கேட்பவர்கள் கீழ்க்கண்ட மூன்று செய்திகளைப் பற்றி படித்தால் நிச்சயம் புரியும். செய்தி ஒன்று: சீனாவில் பூகம்ப பேரிடர் மீட்புப் பணிக்காக ஜியாங் என்ற ஒரு பெண் போலீஸ் அதிகாரியை அனுப்பியிருந்தது அரசு. பிறந்து 6 மாதமே ஆன தனது குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு பயணமானார் ஜியாங். குழந்தையை விட்டுவிட்டு வந்தாலும், அந்தப் பெண் போலீசின் தாய்மை மட்டும் மாறவில்லை. அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த எட்டு குழந்தைகளுக்கும் தனது தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றியிருக்கிறார் ஜியாங். தாய்மை நிறைந்த அந்த பெண் போலீஸ் அதிகாரியை அனைவரும் ‘போலீஸ் அம்மா’ என்று அழைக்கிறார்களாம். செய்தி இரண்டு: இது நடந்தது சென்னையில். மனநிலை சரியில்லாத தனது 20 வயது பெண்ணை அழைத்துக்கொண்டு தலைமைச் செயலகத்திற்கு மனு கொடுக்க வந்திருக்கிறார் ஒரு தாய். அங்கு ஓரிடத்தில் தனது பெண்ணை உட்கார வைத்துவிட்டு, மனு கொடுத்துவிட்டு திரும்புவதற்குள் மனநிலை சரியில்லாத அந்தப் பெண் தனக்கு அருகிலிருந்த பெண் போலீசை தாக்கி விட்டார். இந்த விவரம் தெரிந்து அந்த தாய் பெண் போலீசிடம் மன்னிப்புக் கேட்டதற்கு, அந்தப் பெண் போலீஸ் ‘பரவாயில்லை விடுங்கள், அவர்கள் குழந்தை மாதிரிதானே’ எனப் பெருந்தன்மையோடு அந்தப் பெண் மீது இரக்கம் காட்டியிருக்கிறார். காக்கிச் சட்டைக்குள்ளும் இருக்கும் தாய்மை நிறைந்த இந்த இரு இதயங்களைப் பற்ஷூய செய்திகளைப் படித்தீர்கள் அல்லவா? இனி, 3 வது செய்தி. இது நடந்தது தலைநகருக்கெல்லாம் தலைநகர் டெல்லியில். ஐந்து வயது பெண் குழந்தையை பலாத்காரப்படுத்திய கொடூர குற்றவாளிகளைக் கைது செய்யவும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய நிவாரணமும், நீதி வழங்கவும், ஆயிரக்கணக்கான பெண்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவர்களில் ஒரு பெண்ணை துணை கமிக்ஷனர் ஒருவர் கன்னத்தில் அறைந்து வெளியே செல்லும்படி துரத்தியிருக்கிறார். ஒரு குற்றமும் செய்யாத, ஒரு தவறும் செய்யாத, கைகளில் எவ்வித ஆயுதமுமின்றி , யாரோ ஒரு முகம் தெரியாத பெண் குழந்தைக்காக நீதி கேட்கச் சென்று முற்றுகையிட்ட ஒரு இளம் பெண்னை கன்னங்களில் மாறி மாறி அறைந்த அந்த உதவி கமிக்ஷனர் போன்ற இரக்கமற்றவர்களும் காவல்துறையில் உள்ளனர். காக்கிச்சட்டை என்பது தனது வலுவினையும், அதிகாரத்தையும், பொதுமக்கள் மீது பிரயோகிப்பதுதான் என நினைத்துக் கொள்ளும் பல ஆயிரம் போலீசார் நம் நாட்டில் இன்னும் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குறைந்தபட்சம் சீனப் பெண் போலீஸ் ஜியாங்கியிட மிருந்தோ அல்லது சென்னை பெண் போலீசிடமிருந்தோ தாய்மை கலந்த கடமையைக் கற்றுக் கொள்ளலாம். ஏனெனில், தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. சில சமயம் ஆண்களுக்கும் அது தேவையானதுதான். E.உதயகுமார் நிர்வாக இயக்குனர்

Friday, 29 March 2013

கிழக்கிற்கு ஒரு நீதி! மேற்கிற்கு ஒரு நீதி!-ஏப்ரல்-2013


நடந்தது ஒரே விதமான குற்றம் சுட்டது வெளிநாட்டினர் சுடப்பட்டது இந்திய நாட்டின் பிரஜைகள்.ஆனால்,நடுவண் அரசின் ரியாக்சன் வேறு வேறாக இருக்கிறது.இத்தகையதொரு அதிசய நிகழ்வு நம் நாட்டில் மட்டுமே நடக்கும். கேரளக் கடற்கரையோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று சொல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித்,தமிழக எல்லையோரம் மீன் பிடிக்கும் மீனவர்களை மட்டும் ஒருமைப்பாட்டு தர்மம் சிறிதும் இன்றி,பிரதேச அடையாள மிட்டு தமிழக மீனவர்கள் என்று தனிமைப்படுத்துகிறார். ''எச்சரிக்கை செய்தும் கப்பலருகே வந்தார்கள் எனவே கடற்கொள்ளையர்கள் என்று தவறாக சுட்டுவிட்டோம்''என்கிற இத்தாலி வீரர்களை வழக்கில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுகிறது.பாராளுமன்றம் வெகுண்டெழுகிறது.எதிர்க்கட்சிகள் ஆர்ப்பரிக்கின்றன,இத்தாலிய தூதர் தாயகம் போவதற்கு விமான நிலையக் கதவுகள் மூடிக்கொள்கின்றன.சரி நல்ல விஷயம்தான்.இந்திய மீனவர்களுக்கான இத்தகைய கருணை வரவேற்கக்கூடியதுதான். ஆனால்,அதே இந்தியாவில் பிறந்து,தனது வாழ்வாதாரத்தின் குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள கடல் அன்னையைத் தவிர வேறு வழியில்லாத 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள வெறியர்களால் இதுவரைக் கொல்லப்பட்டிருக்கும் போது எந்த வெளியுறவுத்துறை அமைச்சரும் வாயைத் திறக்கவில்லை.இதைப்பற்றி பேச பாராளுமன்றத்தில் யாருக்கும் நேரமுமில்லை. துரதிஷ்டவசமாக,நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர்களுக்கும் தமிழ்நாட்டின் நலன் இரண்டாம்பட்சமாகவே போய்விடுகிறது என்பதற்கு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் துறைகளே சான்று.தனது மாநிலத்தின் மீனவர்கள் சுடப்பட்ட போது கொதித்தெழுந்த ஏ.கே.அந்தோணியைப் போன்ற மத்திய ராணுவ அமைச்சராகவோ,அதற்கு ஆதரவாய் செயல்படுகிற குர்ஷித் வகித்து வரும் வெளியுறவுத்துறை அமைச்சராகவோ நம் தமிழக அமைச்சர்கள் எவரும் இல்லை என்பது கூட(இதில் என்ன பெரிய வருமானம் வரப் போகிறது?) தமிழக மீனவர்களின் பிரச்சினை முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படாமல் போனதற்குக் காரணம் என்று சொல்லலாம்.மந்திரிகளை விடுங்கள்.தமிழீழம் மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் மாணவர்களின் முனைப்பில் ஒரு சிறு பகுதியைக் கூட நமது முதல்நிலைத் தலைவர்களிடம் நாம் பார்க்கக் காணோம். கூடங்குளம் மின் உற்பத்தி ஒதுக்கீடு,வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு மின்சாரம் வருகின்ற மின்தடம்,தமிழ்நாட்டை ஊடுருவிச் செல்லும் கெய்ல் நிறுவனத்தின் சமையல் எரிவாயு குழாய் பதிப்பு என எந்த தேசியத் திட்டத்திலும் தமிழ்நாட்டின் தேசியநலன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்பது உண்மை.கிழக்கிற்கு ஒரு நீதி,மேற்கிற்கு ஒரு நீதி என்று நடந்து கொள்ளும் அரசை எப்படி நடுவண் அரசு என்று அழைப்பது? ஆனால் ஒன்று மட்டும் உறுதி.இத்தனையும் நடந்தபிறகு தமிழகத்தின் நகரம் மற்றும் கிராமங்களின் வீதிகளில் வரும் தேர்தல்களில் வாக்குக்கோரி நடந்து வர காங்கிரசுக்கும் சரி,மற்ற தேசிய கட்சிகளுக்கும் துணிவிருக்காது. E.உதயகுமார்

Sunday, 3 March 2013

விவசாயிகள் அழுகிற தேசமிது! மார்ச்-2013


ஒரு நாட்டு மக்களை குறிப்பாக அடித்தட்டு மக்களை காப்பதற்கும்,அன்றாடம் ஏற்படும் துயரங்களை தீர்ப்பதற்கும் தான் மத்திய மாநில அரசுகள் இயங்குவதாக இந்த ஜனநாயக அமைப்பில் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அப்படி இல்லையோ?என்ற ஐயங்களை சமீபகால நிகழ்வுகள் நமக்கு காட்டியவண்ணம் இருக்கின்றன. நாட்டு மக்கள் அனைவருக்கும் படி அளந்தாலும்,தாங்கள் உய்வுறுவதற்கு எவ்வித படியும் இல்லாத விவசாய பெருமக்களுக்கு அண்மையில் ஏற்பட்டுவரும் துயரங்கள் ஏராளம் நகரங்களை மேம்படுத்தவும்,நகரங்களை இணைக்கவும்,அரசுகள் எடுக்கும் முயற்சிகளால் தெரிந்தோ தெரியாமலோ கிராமங்கள் நசுக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகள்,ஆறு வழிச்சாலைகளாக உருவாக்கப்பட்டாலும்,நெடுஞ்சாலை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டாலும்,உயர் மின்னழுத கம்பிகள் அமைக்கப்பட்டாலும்,ரயில்வே ட்ராக்குகள் அகலபடுத்தப்பட்டாலும்,அல்லது புதிதாக உருவாக்கப்பட்டாலும்,முதலில் அத்திட்டங்களுக்கு தங்களது நிலத்தையும்,சொத்துக்களையும் பறிகொடுப்பது விவசாய பெருமக்களே!விவசாயிகளுக்கு மானியங்கள் கொடுக்கிறதோ இல்லையோ துயரங்களை தொடர்ந்து கொடுக்க அரசுகள் தவறுவதே இல்லை. இப்போது கொச்சியிலிருந்து பெங்களூருவுக்கு இயற்கை எரிவாயுவை திரவ வடிவில் குழாய்களின் மூலமாக எடுத்துச் செல்ல GAIL என்கிற அரசு பொதுத்துறை நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது,இந்தக் குழாய்கள் செல்லும் பாதை நமது தமிழகத்தில் 310 கி.மீ.வரை பயணிக்கிறது(கர்நாடகத்தில் 95 கி.மீ.மட்டுமே).வீடுகளுக்கு உருளைகளுக்குப் பதில் குழாய்கள் மூலம் எரிவாயு இணைப்பு கொடுக்கப்படும் இந்த திட்டம் வரவேற்கக் கூடியதுதான். ஆனால்,இவை நெடுஞ்சாலைகளின் ஓரமாகவோ,இரயில்வே ட்ராக்குகளின் ஓரமாகவோ,ஆறுகளின் ஓரமாகவோ கொண்டு செல்லப்படாமல்,அப்பாவி விவசாயப் பெருமக்களின் விவசாய நிலங்களுக்கு ஊடாக ஏன் கொண்டு செல்லப்பட வேண்டும்?என்பது தான் நமது கேள்வி. ஏற்கனவே.உயர் அழுத்த மின் கம்பிகள் அமைக்கும்போது,உயரமான மரங்களை வளர்க்ககூடாது என்றார்கள்.இப்போது எரிவாயு குழாய்களை அமைக்கும் போது வேர்விடும் மரங்களை வளர்க்கக்கூடாது என்கின்றனர்.அது மட்டுமில்லாது,அந்த குழாய்களுக்கு சேதம் ஏற்பட்டாலோ,குழாய்களில் திரவக்கசிவு ஏற்பட்டாலோ நிலத்தின் உரிமையாளர்கள்தான் பொறுப்பாம்.எளிதில் தீ பற்றக்கூடிய ரசாயனம் தனது சொந்த நிலத்திற்கு அடியில் செல்வதை எந்த விவசாயிதான் விரும்புவார்? நிலத்தின் கீழேயும் நெருப்பு(எரிவாயு),நிலத்தின் மேலேயும் நெருப்பு(உயர் அழுத்த மின் கம்பிகள்)தண்ணீரும் கிடைக்கவில்லை,உரம் வாங்கவும் காசில்லை என்று அடுக்கடுக்கான துயரங்களை விவசாயிகளுக்குக் கொடுப்பதுதான் மத்திய அரசின் நோக்கமாக இருக்கிறது.அதற்கு அரசு 'தேசிய நலன்'என்று பெயர் சூட்டினால்,அது ஜனநாயக போக்கிற்கு விரோதமானது. பெண்களும்,விவசாயிகளும் அழுகிற தேசம் உருப்படாது என சாஸ்திரம் சொல்கிறது. அது சரி.நாம் எப்போது சாஸ்திரங்களை மதித்தோம்?. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

Wednesday, 20 February 2013

'லா'வை மீறும் சவுதாலாக்கள்! பிப்ரவரி-2013


ஒரே வீட்டில் தந்தையும்,மகனும் சிறைக்குச் செல்வது என்பது நமது பாரதத்திற்குப் புதிதல்ல.நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு அப்படித்தான் சிறைக்குச் சென்றார்கள்.அதையும் பெருமையாகக் கருதினார்கள்.அது இந்தியா சுதந்திரம் அடைவதற்கான போராட்டம்.ஆனால்,இன்றும் அப்படி சிறைக்குச் செல்ல துவங்கி இருக்கிறார்கள்.நாட்டு மக்களுக்காக அல்ல;வீட்டு மக்களுக்காக. அரசியல்வாதிகள் ஊழல் செய்வதும்,அது பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளியாவதும்,பின்பு அதை மறந்துவிட்டு வேறு பரபரப்பான செய்திகளுக்குத் தாவுவதும் நமக்கு வாடிக்கையான ஒன்றாகும்.அந்த வரிசையில் இது ஒரு புதிய செய்தி.ஒரு மாஜி முதல்வரின் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு,தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது.சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாஜி முதல்வருக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது என்பது இதுதான் முதல்முறை என்கிறார்கள். ஹரியானா மாநிலத்தில் 1999-2000-வது ஆண்டில் தனக்கு வேண்டியவர்களையும்,லஞ்சம் வாங்கியவர்களையும் ஆசிரியர்களாக நியமனம் செய்ததாக இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும்,ஹரியானா மாநிலத்தின் அப்போதைய முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா மீது குற்றம் சாட்டப்பட்டது.குற்றம் நடந்து 13 ஆண்டுகள் கழித்து தண்டனை அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஆயுள் தண்டனைக்கே அசராத நமது அரசியல்வாதிகளுக்கு,10 ஆண்டு கால சிறை என்பது பக்கத்து நாட்டுக்கு சுற்றுலா செல்வது போலாகும்.இது சவுதாலாவுக்கு மட்டுமல்ல,மக்களுக்கும் நன்கு தெரியும்.பெரும் பணம் செலவழித்து ஆட்சியை பிடிப்பது,ஆட்சிக்கு வந்தவுடன் பன்மடங்கு பணத்தை சுருட்டுவது போன்ற அரசியல்வாதிகளுக்கு பல ஆண்டுகள் கழித்து குறைவான தண்டனை வழங்குவது என்பது நம் வீட்டுக் குழந்தையை மயிலிறகால் அடிப்பது போன்ற எண்ணத்தையே நமக்கு தருகிறது. தாமதமாக வழங்கப்பட்டிருக்கின்ற மற்றும் குற்றத்தின் தன்மைக்கு குறைவாக வழங்கப்பட்டிருக்கின்ற தீர்ப்பு என்ற போதிலும்,ஒரு ஊழல் அரசியல்வாதிக்கு,அதுவும் ஒரு முன்னாள் முதல்வருக்கு வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு என்பதால் இதை கைதட்டி வரவேற்றுதான் ஆக வேண்டும். போலி நிதி நிறுவனங்கள்,மல்டி-லெவல் வியாபாரங்கள்.தேக்கு மர வளர்ப்பு,ஈமு கோழி வளர்ப்பு என்ற பெயரில் மக்கள் பணத்தை சுருட்டும்'டை'கட்டிய கிரிமினல் பேர்வழிகளுக்கும்,சவுதாலா போன்ற ஊழல்வாதிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நாம் உணரவில்லை. இந்த முறைகேடுகள் ஹரியானா மாநிலத்தில் மட்டுமல்ல,இந்தியா முழுவதும் பரவியுள்ளது.மாஜிக்களுக்கும்,ஆட்சியாளர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணியாகும்.ஓம் பிரகாஷ்,அஜய் சிங் சவுதாலாக்கள் போல 'லா'வை மீறும் சவுதாலாக்கள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டு,விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு காலம் தாழ்த்தாது உடனே கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். தந்தை,மகன் இருவர் மட்டுமல்ல;இன்னும் கொஞ்சம் கிளறிப் பார்த்தால் நாடு முழுக்க நிறைய ஊழல் குடும்பங்கள் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.சவுதாலா குடும்பம் ஒரு தொடக்கமே.அதைத் தொடர்ந்து பல்வேறு ஊழல் குடும்பங்களின் சிறையை நோக்கிய அணிவகுப்பைப் பார்க்க யாருக்குத்தான் ஆசையிருக்காது? காத்திருப்போம்! E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

இந்தியா ஆன்மீக பூமி அல்ல!-ஜனவரி-2013


உலகெங்கிலும் உள்ள வெளிநாட்டினர் ஆச்சரியமுடன் பார்க்கும் பல விஷயங்களில் முதன்மையானது நம் நாடு ஓர் 'ஆன்மீக பூமி'என்பது தான் ஆனால்,தற்போதைய காலகட்டத்தில் நம் நாடு மெல்ல மெல்ல 'ஆபாச பூமி' ஆகிக் கொண்டிருக்கிறதோ? என்கிற அச்சம் நம் எல்லோருக்கும் ஏற்படத் துவங்கியிருக்கிறது. டெல்லியில் நடந்த மருத்துவக்கல்லூரி மாணவியின் கற்பழிப்பு சம்பவத்தைத்தான் இந்த தலையங்கம் பீடிகையோடு சொல்ல முயல்கிறது என்று நினைக்க வேண்டாம்.தலைநகரில் நடைபெறும் சம்பவங்கள் மட்டுமே தலைப்புச் செய்தியாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. தலைப்புச் செய்தி ஆகாமல்,தவறிப்போய் பெட்டிச் செய்திகளில்,சுருக்கமாகச் சொல்லிவிட்டு தொடராமல் போன எத்தனையோ கற்பழிப்புச் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கென நாம் ஆண்டுக்கணக்கில் ஏடுகளைப் புரட்டிப் பார்க்க வேண்டாம்,இதோ, கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டுமே செய்தி ஏடுகளில் வந்த தலைப்புச் செய்தி ஆகாமல் போன செய்திகளில் சில- -மகளை ஈவ்டீசிங் செய்த அகாலிதள கட்சிப் பிரமுகர் ராணவைத் தட்டிக்கேட்ட தந்தை கொலை.இடம்:அமிர்தசரஸ் .(டிசம்பர் 6) -பள்ளிக்குச் சென்ற 13வயது மாணவி புனிதா மர்ம நபர்களால் கற்பழித்துக் கொலை. இடம்:தூத்துக்குடி,(டிசம்பர் -21) -இளம் பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கற்பழித்ததோடு,மரத்தில் கட்டி வைத்து அடித்து சித்திரவதை.இடம்:திரிபுரா,(டிசம்பர்-23) -4 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணைக் கற்பழித்து வெறியாட்டம்.இடம்:விருத்தாச்சலம்,(டிசம்பர் 24) -7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞன் கைது.இடம்:புதுக்கோட்டை(டிசம்பர்-24) -9 வயது பள்ளிச் சிறுமியை கடத்தி,மர்ம நபர்கள் கற்பழிக்க முயற்சி.இடம்:உஜ்ஜெயினி(டிசம்பர்-23) -பெண்களுக்கு எதிரான குற்றங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 36 எம்.எல்.ஏக்கள்,2 எம்,பி.க்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.எந்நேரமும் கைதாகலாம்.(டிசம்பர்-21) -உத்திர பிரதேசம் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த 26 அமைச்சர்கள் கொலை,கற்பழிப்பு வழக்குகளில் சிக்கியவர்கள்.(டிசம்பர் 23) இவையெல்லாம் உதாரண சம்பவங்கள்தான்.முழுவதையும் சொல்ல வேண்டுமெனில், முழு இதழும் தேவைப்படும். வாழ்க்கை முறையிலும்,நடை உடை பாவனையிலும் நமது நாகரீகம் மேம்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.ஆனால்,நமது நடத்தை கற்காலத்தை நோக்கி அதாவது காட்டுமிராண்டித்தனமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. கட்டுப்பாடில்லாத ஆபாச இணையதளங்கள்,சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் மது பானங்கள், விலை மலிவாகக் கிடைக்கும் போதைப் பொருட்கள்,யாதொரு தணிக்கையுமின்றி வெளியிடப்படும் ஆபாசத் திரைப்படங்கள்,சரியான வழிகாட்டுதலை செய்ய முயலாத பெற்றோர்கள்,குற்றங்களின் வேர்களைக் கண்டறிந்து களையாத அரசுகள்.இவை எல்லாமும்தான் டெல்லி சம்பவமும், அதே போன்று பல்வேறு சம்பவங்களும் தொடர்ந்து நாடு முழுவதும் நிகழ காரணங்களாகின்றன. எதிர்காலத்தில் இந்தியா வல்லரசு நாடாகும் என்று முழக்கமிடுகிறார் பிரதமர்.வல்லரசு வேண்டாம்.பெண்களை மதிக்கிற,பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிற நல்லரசு நாடாக இருந்தாலே போதும். அதற்கு இந்த அரசுகள் என்ன செய்யப்போகின்றன.? E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

தமிழக அரசின் தார்மீகப் பொறுப்பு -டிசம்பர்-2012


இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்ற காலத்திற்கு முன்பிருந்தே நமது மக்களில் சிலருக்கு ஒரு பழக்கம் இருந்து வருகிறது.அதாவது,அத்தியாவசியப் பொருளை பதுக்குவது,தட்டுப்பாட்டை உருவாக்குவது,பின் விலையேற்றி விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிப்பது.பஞ்ச காலங்களில் அரிசி,கோதுமை,சர்க்கரை போன்ற பொருட்களை பதுக்குவதை தங்களது தொழிலாகவே செய்து வந்தோர் பலர். அவர்களது பதுக்க வேண்டிய பொருட்கள் லிஸ்டில் பால் பவுடர் கூட இடம் பெற்றிருந்தது என்பதுதான் கொடுமை.அதன் பிறகு மாநில அரசுகள் விழித்துக்கொண்டு சாட்டையைச் சுழற்றியதாலும்,வேளாண்மை மேம்பாடு காரணமாகவும் மெல்ல அதிலிருந்து விடுபட்டோம். ஆனால்,பதுகுவதற்கு வாய்ப்பே இல்லாத,அவசியமே இல்லாத மற்றுமொரு அத்தியாவசியப் பொருள்தான் ஆற்று மணல்.இயற்கை அன்னை வாரி வழங்கும் இலவசப் பொருளான ஆற்று மணலையும் பதுக்கி,தட்டுப் பாட்டை உருவாக்கி,அதிக விலைக்கு சிலர் விற்று விடுகிறார்கள்.அரசு நிர்ணயித்த விலையை விட பத்து மடங்கு விலையை அதிகமாக உயர்த்தி விற்பது,அந்த விலையை கொடுத்தாலும் கூட மணலை உடனடியாக கொடுக்காமல் தண்ணீர் காட்டுவது என கயமைத்தன்மை மிக்க செயல்களால் ஒரு லோடு மணலின் விற்பனை விலை ரூ.42,000-ஆக உயர்ந்தது.(27.11.12 அன்று நிலவரப்படி)இது கிட்டத்தட்ட இரண்டு சவரன் தங்க நகையின் விலைக்கு நிகரானது.மணலில் தங்கம் இருக்கிறதா?என்று தேடியதெல்லாம் ஒரு காலம்.மணல் விலை தங்கத்தை விட உயர்ந்திருப்பது இந்த காலம். அரசு,தானே விற்பனை செய்வது போல் அறிவிப்பினை வெளியிட்டு.மணல் அள்ளிப் போடும் ஆட்களை காண்ட்ராக்டர் ரூபத்தில் உள்ளூர் ஆட்களுக்கு'சிறப்பு அனுமதி தந்திருக்கிறது.தற்போதைய இந்த நிலைக்கு. முன்பு இருந்த நிலையே மேல் என்று எண்ணத்தான் தோன்றுகிறது. ஆட்சியாளர்களிடம் சொல்லியும் பலன் இல்லை,ஆட்சியரிடம் சொல்லியும் பலனில்லை,ஊடகங்களில் புலம்பியும் பலனில்லை என்று தவிக்கிறார்கள் கட்டுமானத்துறையினர். இறுதியாக,வருகிற 12ஆம் தேதி போராட்டம் ஒன்றையும் நடத்தப் போகிறார்களாம்.போராட்டம்,பேரணி போன்றவற்றை பெரிதாக நடத்திதான் இந்த அரசின் கவனத்தை கவரமுடியும் என்பதைத் தவிர வேறு என்னவழி நமக்கு? நமது மக்களுக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு.எல்லா விலையேற்றதிற்கும் கண்டனம் தெரிவிப்பார்கள்,கொடி பிடிப்பார்கள்,கூச்சல் போடுவார்கள்.பிறகு படிப்படியாக அந்த சுமைக்கு அடிபணிந்து விடுவார்கள்.அப்படித்தான் பெட்ரோல்,டீசல்,போக்குவரத்து,பால்,மின்சாரம்,சிமெண்ட்,கேஸ் சிலிண்டர் போன்ற பலவகை கட்டண உயர்வுகளையும் நாம் பழகிக் கொண்டு விட்டோம்.அந்த வரிசையில் மணலும் இடம் பெற்றுவிட்டால் அதைவிட கட்டுமானத்துறைக்கு ஆபத்து வேறேதும் இல்லை. மேலே சொன்ன பொருட்களின் விலையேற்றத்தில் கூட ஏதோ ஒரு வகையில் உற்பத்திச் செலவு என்கிற காரணி ஒளிந்துள்ளது.(அதற்காக அந்த விலை உயர்வை நாம் நியாயப்படுத்தவில்லை).ஆனால்,உற்பத்திச் செலவே இல்லாத,இயற்கை நமக்கு கொடுத்த ஆற்று மணலை சுரண்டி,அநியாய விலைக்கு விற்பது எவ்வகையிலும் நியாயமற்றதாகும். பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் இந்த அநியாயக் கொள்ளையைத் தடுக்க நமது போராட்டம் வரை காத்திருக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க முன்வருவதுதான் தமிழக அரசின் தார்மீகப் பொறுப்பாக இருக்கும். E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

தடம் மாறும் ஊடகங்கள்-நவம்பர்-2012


நாட்டையும் நாட்டு மக்களையும் நெறிபடுத்த,அரசு இயந்திரங்களை நேர்படுத்த எல்லா ஜனநாயக நாடுகளிலும்,ஏன் சர்வதிகார நாடுகளிலும் கூட இருக்கிற ஒரே ஒரு வலிமையான ஆயுதம் ஊடகம் மட்டுமே. உலகெங்கும் எத்தனையோ அநியாய அரசாங்கங்களை கவிழ்த்தும்,எண்ணிலடங்கா அக்கிரமங்களை வெளிக் கொணர்ந்தும்,சமுதாயத்தோடு பின்னிப்பிணைந்தும் இயங்குகின்ற பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் இல்லையெனில் இந்நாடு எப்போவோ பணக்கார முதலைகளுக்கு விலை பேசப்பட்டிருக்கும்.எத்தனை அராஜகங்கள் நடந்தாலும் மக்களுக்கு இருக்கிற ஒரே ஒரு நம்பிக்கை பத்திரிகை,தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் தான். உண்மையில் எல்லா மாநிலங்களிலும் எதிர் கட்சிகளாக விளங்குவதும் இவைதான்,ஊடங்கங்களின் வழிகாட்டுதல்களிலும்,பாதுகாப்பிலும் தான் ஒரு நாட்டின் ஜனநாயகம் காக்கப்படுகிறது என்பது நிதர்சனம். ஆனால்,மேற்கூறிய எண்ணங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக ஊடகங்கள் தவிடுபொடியாக்கி வருகின்றன என்பதை சமீப கால நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. எஸ்.எம்.எஸ் போட்டி நடத்தி பெருவாரியான மக்களிடமிருந்து பணம் பறிப்பது.மக்களை முட்டாளாக்கும் கோடிஸ்வர நிகழ்ச்சிகளை நடத்துவது.நிகழ்ச்சியில் பங்கேற்போர்களை சண்டையிட வைத்து அதன் மூலம் டி.ஆர்.பி ரேட்டினை ஏற்றுவது,நம்பகமற்ற விளம்பரங்களை ஒளிபரப்புவது அல்லது வெளியிடுவது இந்த வரிசையில் இன்னொன்றையும் சேர்த்துகொள்ளலாம். பிரபலமான தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை மிரட்டுவது. இப்படி ஒரு மிரட்டலை செய்திருக்கிறது ஓர் ஊடகம்.அதன் பெயர் ஜீ.டிவி.வட இந்தியாவில் பிரபலமான அந்த சேனல் ரூ.100கோடி மதிப்பிலான விளம்பரம் கேட்டு இந்தியாவின் முக்கிய இரும்பு உருக்காலை நிறுவனமான ஜின்டால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.நவீன் ஜின்டாலை மிரட்டியிருக்கிறது.என்ற செய்தி நாடு முழுவதும் உள்ள ஊடகங்களின் மீதான் நம்பிக்கையை பெரிதும் அசைத்திருக்கிறது. 'ரூ.100கோடி விளம்பரத்தினை எங்கள் சேனலுக்கு தாருங்கள்!இன்றேல்,உங்கள் நிறுவனத்தைப் பற்றி தப்புத் தப்பான செய்திகளை ஜீ.டிவியில் தொடர்ந்து ஒளிபரப்புவோம்' என்று நவீன் ஜின்டாலிடம் ஜி.டிவி நிறுவன அதிகாரிகள் பேரம் பேசியதை ஜின்டால் நிறுவன அதிகாரிகள் வீடியோ எடுத்து ஜீ.டிவியின் உண்மை சொரூபத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். டிவி சேனலுக்கு மட்டுமல்ல,பத்திரிகைகளுக்கும் விளம்பரம் அவசியம் தான்.ஆனால்,விளம்பரத்தைப் பெறுவதற்காகவே இவற்றை நடத்தினால் விளம்பரதாரர்களுக்கு ஆதரவாக நடுநிலைமை தவறி நடந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.ஜின்டால் நிறுவனம் உண்மையில் தவறு செய்திருந்தாலும்,செய்தியை வெளியிடாமல் இருக்க ரூ.100கோடி பணம் கொடுங்கள் என மிரட்டுவது,சாலை வழிப்பறிக்கு சமமாகும்.உண்மையில் ஜீ.டிவி மட்டுமல்ல,ஏராளமான முன்னணி சேனல்களும், பத்திரிகைகளும் தற்போது இந்த வியாபாரத்தைத் தான் செய்து வருகின்றனர்.அதாவது உண்மையை அறிந்துகொள்வது,பின் அதனை வெளியிடாமல் இருக்க பணம் கேட்பது. ஊழலை தட்டிக்கேட்பதற்குதான் ஊடகங்கள் என்கிற நிலைமை மாறி ஊழல்வாதிகளிடமே பணம் கேட்டு ஊடங்கங்கள் நிற்பது ஜனநாயக நாட்டிற்கு எந்த விதத்திலும் நன்மையை தராது. நம்முடைய பேனா தலைகுனியும் போது தான், நாட்டின் ஜனநாயகம் தலைநிமிரும். ஆனால் நாமே தலைகுனிந்தால்? E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

ஊழல்வாதிகளின் பணம் காய்ச்சி மரம்-அக்டோபர்-2012


உலக மக்களில் மொத்தமே இருபிரிவுகள் தான்.ஒரு பிரிவு.அதிகாரம் செய்பவர்கள்.இன்னொரு பிரிவு அதிகாரத்திற்கு ஆட்படுபவர்கள்.'அதிகாரத்தைச் செலுத்துபவர்கள்'என்ற பிரிவில் நுழைந்து எளிய மக்களை ஆட்டிப் படைக்கும் சக்திகள் எல்லாக் காலகட்டங்களிலுமே இருந்து கொண்டே தான் வருகின்றனர்.மன்னராட்சி,அன்னியர் ஆட்சி,மன்னராட்சியை விட மோசமானதோ இந்தக் குடியாட்சி? என்று நம்மை எண்ணவும் செய்கிறது.அஜாக்கிரதையாலும்,முன் யோசனை இல்லாத திட்டங்களினாலும் ஏற்படக்கூடிய பல்வேறு வகையான வருமான இழப்புகளுக்கு அதிகாரத்திற்கு அடிபணியக்கூடிய எளிய மக்கள் தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அண்மையில்,மத்திய அரசால் விதிக்கப்பட்ட டீசல் விலைஉயர்வு,மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர் குறைப்பு.சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தல் முதலானவற்றுக்காக,எப்பொழுதுமே பேசாத பிரதமர் மன்மோகன் சிங்,தொலைகாட்சியில் 15 நிமிடம் பேசியிருக்கிறார்.விலை உயர்வுக்கும்,அன்னிய நேரடி முதலீட்டிற்கும் சப்பைக் கட்டு கட்டிய பிரதமர் மறந்தும் கூட,அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பான ஸ்பெக்ட்ரம் 2G ஊழல் ரூ.1.76,000 கோடி பற்றியோ,122 நிலக்கரி சுரங்கங்களை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததினால் ஏற்பட்ட இழப்பு ரூ.1,86,000 கோடி பற்றியோ,வெடிக்கக் காத்திருக்கும் அடுத்த ஊழலான ரூபாய் ஆறு இலட்சம் கோடி மதிப்பிலான விண்வெளி ஸ்பெக்ட்ரம் பற்றியோ, வாயைத் திறக்கவில்லை.இந்தப் பணமெல்லாம் ஒழுங்காக வசூலிக்கப்பட்டு,ஊழல் அரசியல்வாதிகளின் முழு கருப்புப் பணத்தையும் வெளிக்கொணர்ந்தால்,பெட்ரோல் விலை லிட்டருக்கு.ரூ.10 ஆகவும்,வருடத்திற்கு 25 காஸ் சிலிண்டரும் கிடைக்கும்.பொருளாதார மேதையான பிரதமருக்கு இது தெரியாமலா இருக்கும்? எளிய மக்களை நசுக்காமல் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவேண்டும் என்கிற எவ்விதமான ஆக்கபூர்வமான திட்டங்களும் இல்லாத,தனது கட்சியிலும்,கூட்டணிக் கட்சிகளிலும் உள்ள ஊழல் பேர்வழிகளைக் கட்டுப்படுத்த இயலாத நமது பிரதமர்,ஒரு புதிய விஷயத்தை நமக்கு சொல்ல முன்வந்திருக்கிறார்.பணம் மரத்தில் காய்ப்பதில்லையாம்.அதனால்,நாம் இந்த நெருக்கடியை ஏற்றுக் கொண்டுதான் தீர வேண்டுமாம். ஆனால்,உண்மை என்ன தெரியுமா?பணம் மரத்தில் தான் காய்க்கிறது.அந்த மரத்தின் பெயர் 'இந்தியா'. அந்த மரத்தை விதைத்து,வளர்த்து,பராமரித்து வருவது,எந்தவித அதிகாரமும் இல்லாத எளிய இந்திய மக்கள் தான்.அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அந்த மரத்தில் காய்க்கும் பணத்தை அறுவடை செய்யும் வித்தை நன்றாகத் தெரிந்திருக்கிறது,அதை பதுக்கவும் தெரிந்திருக்கிறது. வெகு நாட்களுக்கு முன் ஒரு தமிழகத் தலைவருக்கு பிரதமர் பதவி தேடி வந்தபோது அதை மறுத்து அவர் சொன்ன வார்த்தை:''நாட்டின் பிரதமர் என்பவர் வெறுமனே நாட்டின் அன்றாட நிர்வாகத்தை பார்த்துக் கொள்பவர் அல்லர்.பிரதமராக வருபவருக்கு ஆழ்ந்த பொருளாதார அறிவு,தொலைநோக்குப் பார்வை,உலகம் எந்த திசையில் போய்க்கொண்டிருக்கிறது?அதில் இந்தியாவை எப்படி வழி நடத்த வேண்டும்?போன்ற சிந்தனைகள் வேண்டும்.என்னால் அது முடியாது.ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பதவி வருகிறது என்றால் அதில் போய் நாம் ஒட்டிக் கொண்டுவிடுவதா?பதவியை விட தேசம் பெரிது அல்லவா?''இப்படி சொன்னவர் ஜி.கே.மூப்பனார்.ஆனால்,அதற்குப் பின் வந்த எந்தப் பிரதமருக்கும் மூப்பனாரின் தெளிவு இருந்ததாக நாம் அறியவில்லை. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

கறுப்பு ஆகஸ்ட் -செப்டம்பர்-2012


வர வர நமது மக்கள் மோசமான கலாசாரத்திற்கும்,நடத்தைகளுக்கும் முன்னுதாரணமாக ஆகிக் கொண்டிருக்கிறார்களோ?என்ற ஐயம் வலுப் பெற்றுக் கொண்டே வருகிறது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நடந்த சில சம்பவக் கோர்வைகளை படித்துப் பார்த்தால்,அது உங்களுக்கே புரியும். ஆதி திராவிடர்கள் பள்ளிக்கு வருவதே பெரும்பாடு.அவர்களும் பள்ளிக்கு வந்து தடையில்லாத கல்வியைப் பெற வேண்டுமென்ற நல்ல நோக்கில் அரசினால் ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த எளிய மாணவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை ஏய்த்து கொள்ளையடித்திருக்கிறார்கள்! அருவெறுப்பான இவர்கள் தலைமையாசிரியர் பதவி வகித்தார்கள் என்பது ஜீரணிக்க முடியாத ஒன்று. நாட்டின் கிரானைட் போன்ற கனிம வளங்களை குறிப்பிட்ட அளவு மட்டும் எடுத்து நாட்டின் உள் நாட்டுத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும்,உபரி கனிமங்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் அந்நிய செலாவணியைப் பெருக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.ஆனால் ஒரேயடியாக அரசையும்,மக்களையும் ஏமாற்றி,வரையறை மீறி ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான அரசின் வருமானத்தை 177 கல்குவாரி நிறுவனங்கள்'ஸ்வாகா'செய்திருக்கின்றன.இதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு என்பது வெளிப்படைச் செய்தி. நாட்டின் இன்னொரு செல்வமான நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு முறைகேடாக ஒதுக்கியதன் மூலம் ரூ.1,86,000 கோடி இழப்பு ஏற்பட மத்திய அரசின் செயல்பாடுகளே காரணமாக இருந்திருக்கிறதாம். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை ஓவர்டேக் செய்திருக்கிறது நிலக்கரி சுரங்க ஊழல்.பிரதமர் வழக்கம் போல மெளனமாக இருக்கிறார். நம் மாநிலத்திற்கு தேவையான பணியாளர்களைத் தகுதி தேர்வுகள் மூலம் நியமித்துக்கொள்ளும் அமைப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.இது நடத்திய குரூப் 2 தேர்வின் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியாகிவிட்டது.இதனை வாங்குவதற்கு மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இன்டர்நெட் சென்டர்களையும்,லாட்ஜ்களையும் தேடி அலைந்திருக்கிறார்கள்.இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து வினாத்தாளைப் பெற்றுள்ளார்கள்.நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் ஒட்டுமொத்த அரசுத் தேர்வு முறையைக் கேலிக் கூத்தாக்கியிருக்கிறது. கடந்த ஆகஸ்டை கறுப்பு ஆகஸ்டாக மாற்றிய ஊழல் சம்பவங்கள் இவை.ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் கொடியேற்றியதைத் தவிர வேறு எந்த நல்ல விஷயமும் சென்ற மாதத்தில் நடக்கவில்லை என்பது நம்மை உறைய வைக்கும் செய்தி! முதல் மூன்று விஷயங்கள் அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகள் ஆகியோர் தொடர்புடையது.ஆனால்,வினாத்தாள் விவகாரத்தில் ஊழல் செய்தது, வேலை தேடும் இளைஞர்கள்.அதாவது மக்கள். ஊழல் அரசியல்வாதிகள்,நேர்மையற்ற அரசு அதிகாரிகள் தன்னொழுக்கம் இல்லாத தறிகெட்ட மக்கள்,இதுதான் இந்தியாவின் அடையாளமாக மாறிக்கொண்டிருக்கிறது.தாங்கள் வாழும் தேசத்தை பாழ்படுத்த நினைக்கும் மனித கூட்டம் பல்கிப் பெருகி வருவது கவலைக்குரியது. ''காக்கை குருவி எங்கள் ஜாதி'' என்று பாரதி என்னமோ பெருமையாகப் பாடியிருக்கலாம்.இதை காக்கை குருவிகள் தற்போது கேட்க நேர்ந்தால்,''நாங்களா உங்கள் ஜாதி?'' என நம்மை காறித்துப்பக் கூடும். ஏனெனில்,எந்த காக்கைக் குருவியும் ஆதிதிராவிட ஏழைக்குழந்தைகளின் கல்வித் தொகையைக் கவர நினைப்பதில்லை. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

கேட்கவிரும்பும் ஒரே கேள்வி!-ஆகஸ்ட்-2012


1962.தமிழ்நாட்டில் பிறந்த எந்தக் குழைந்தைக்கும் 'அ' ன்னா,'ஆ' வன்னா தெரியாமல் போய்விடக் கூடாது என்று பதைபதைத்த காமராஜரின் ஆட்சிகாலம் அது. அரசு செய்தித் தொடர்புத்துறை அதிகாரிகள் காமராஜரைப் பார்க்க வந்தார்கள். ''ஐயா,இதுவரை நமது ஆட்சியில் செய்து வந்த சாதனைகளை பொது இடங்களிலும், திரை அரங்குகளிலும்,ஒளிபரப்பச் செய்யலாம்.இதன் மூலம் அரசிற்கு நற்பெயர் கிடைக்கும்'' என்றார்கள். காமராஜர் எவ்வளவோ மறுத்தும் அதிகாரிகள் அவரை சம்மதிக்க வைத்தார்கள்.கடைசியில் காமராஜர், ''அதற்கு எத்தனை செலவாகும்?'' என்றார்.அதிகாரிகள் தொகையைச் சொன்னார்கள். தொகையைக் கேட்டதும் காமராஜர்.''அட எழுந்து போங்கய்யா! அத்தனை காசு எங்கிட்ட இருந்தா நாலு பள்ளிக்கூடத்தைக் கட்டுவேன்'' என்றார். தனது சிந்தை,நாடி,நரம்பு,இரத்தம் அனைத்திலும் சேவை என்ற அந்த ஒற்றை வார்த்தை தவிர,வேறு அறியாத அவர் போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டில் ஏனோ உருவாகவில்லை.கல்வித்தந்தை என நாம் அழைக்கும் அவரது படம் எல்லா அரசு அலுவலகங்களிலும் உண்டு. ஆனால் அரசின் எந்த செயல்பாடுகளிலும் காமராஜரின் வாசமில்லை. அண்மையில் தாம்பரத்தைச் சேர்ந்த பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமி,பள்ளியின் பேருந்தில் வீட்டிற்கு திரும்பும்போது,பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து,அதே பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறாள்.சிறுமி இறந்ததைப் பார்த்த பொதுமக்கள் ஓட்டுநரை நையப்புடைத்ததுடன் பேருந்தையும் எரித்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட சியோன் பள்ளி முதல்வரைக் கேட்டபோது 'இது எங்களுக்கு சொந்தமான பேருந்தே அல்ல' என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்.தாம்பரம் ஆர்.டி.ஓ.அலுவலரைக் கேட்டால்,'பஸ்ஸில் ஓட்டை இருந்தது என்று யார் சொன்னது?ஓட்டை இருந்தால் நாங்கள் சான்றிதழ் கொடுத்திருக்க மாட்டோமே! என்கிறார்.அப்படியெனில்,எஃப்.சி.பெற்ற ஒரே மாதத்தில் இவ்வளவு பெரிய ஓட்டை திடீரென விழுந்துவிட்டதா? என நமக்குத் தெரியவில்லை.இந்த ஆர்.டி.ஓ.அலுவலரையும்,பள்ளி தாளாளரையும் கூப்பிட்டு வெளுத்து வாங்குவதற்கு பள்ளிக்குழந்தைகளின்பாற் உயிரையே வைத்திருந்த காமராஜர் போன்ற தலைவர்கள் இப்போது இல்லை. இலாப நோக்கு இல்லாத,சேவை மனப்பான்மையோடு செய்யக்கூடிய தொழில்களை அரசு முன்னுரிமை எடுத்துக் கொண்டு நடத்துவதுதான் அனைத்து நாடுகளிலும் மரபு.ஆனால்,நம் நாட்டில் சாராயத்தைக் காய்ச்சி விற்கும் தொழிலை அரசு ஏற்றுக் கொண்டது. வருங்கால சந்ததியினரை உருவாக்க,நம் நாட்டில் இருக்கின்ற ஒரே ஒரு வாய்ப்பான கல்விக் கூடங்கள் தனியார் வசம் வந்துவிட்டது. அதன் விளைவுகளின் ஒரு சிறுதுளி தான் இந்த சிறுமியின் மரணம். நாம் இங்கு யாரையும் தனித்தனியாக பல்வேறு கேள்விக் கணைகளை தொடுக்கப் போவதில்லை. ஒரே ஒரு கேள்விதான் கேட்க விரும்புகிறோம். ஒரு குழந்தை விழக்கூடிய அளவிற்கு ஓட்டை இருந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநரையும், பேருந்துக் கட்டணம் என்று ஆண்டுதோறும் ஒரு பெரிய தொகையை வாங்கி வைத்துக் கொண்டதோடு அந்தப் பேருந்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று,தப்பித்துக்கொள்ள நினைக்கும் அந்த பள்ளி முதல்வரையும்,தனது பேருந்து எந்த நிலையில் இருக்கிறது என்பதைக்கூட அறியாத முதலாளியையும்,நாங்கள் எஃப்.சி வழங்கும் போது அந்த ஓட்டை இல்லை என(பேருந்து எரிந்துவிட்டதால் ஓட்டை தெரியவா போகிறது?)சொல்லும் தாம்பரம் ஆர்.டி.ஓ .அலுவலரையும்,நாம் கேட்க விரும்பும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். ''இறந்து போன அந்தக் குட்டி தேவதை ஸ்ருதி ஒருவேளை உங்கள் குழந்தையாக இருந்தால் நீங்கள் இந்த பதில் தான் சொல்வீர்களா?'' E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

நாமாவது வெட்கப்படுவோம்-ஜூலை-2012


நாட்டில் பிரதமர் பதவிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளாக இராணுவத்துறை,நீதித்துறை மற்றும் உள்துறை ஆகிய பதவிகளைக்குறிப்பிடலாம்.(இதுவரை சிறந்த தலைவர்கள் அந்த பதவிகளில் உட்காரவில்லை என்பது வேறு விஷயம்)இவற்றுள் உள்துறையின் பங்கு முக்கியமானது.நாட்டிற்கு அண்டை நாடுகளுடனான வெளியுறவும்,எல்லைக் காவலும் எத்தனை முக்கியமோ,அத்தனை முக்கியம் உள்துறைக்கும் உண்டு.உள்துறை அமைச்சராக இருப்பது வெறும் உயர்ந்த பதவி மட்டுமல்ல ,ஒரு உன்னதமான பொறுப்பும் கூட.நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பணி. அந்தப் பணிக்கு புத்திக்கூர்மை,உடனடிச் செயல்வேகம்,பல்வேறு மாநிலங்களின் அரசு அதிகாரிகளைப் பற்றிய அறிவு.மக்களின் வாழ்வு நிலை,கலாச்சாரம்,மதப்பிரிவினை ஆகியவற்றைப் பற்றிய தேர்ந்த ஞானம்,நமது உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் வெளிநாடுகளின் சக்தியை கண்டறியும் திறன்,இவையெல்லாவற்றையும் விட 100 சதவீத நேர்மை ஆகியன அவசியம் இருக்க வேண்டும். நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு இதெல்லாம் இருக்கிறதா?என்று ஆராய்வது நமது தலையங்கத்தின் நோக்கமல்ல. குறைந்தபட்சம் தாம் தேர்ந்தெடுக்கப்பட்ட விதத்தினை பற்றிய விமர்சனங்களும்,ஐயங்களும் எழும் போது,அவற்றை நேர்கொள்வது தான் உள்துறை அமைச்சரின் குறைந்தபட்ச நேர்மையாக இருக்கமுடியும்.தாம் தில்லுமுல்லு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கை எதிர்கொள்ள அச்சப்பட்டு,பலமுறை காலம் தாழ்த்தி,இறுதியாக இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று,ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார்,ஆனால் உயர்நீதிமன்றம்,அவருடைய மனுவை தள்ளுபடி செய்து,'வழக்கை சந்தித்தே தீரவேண்டும்' என்று உத்தரவிட்டிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை மோசடி,ஏர்செல் மாக்ஸிஸ் ஒப்பந்த ஊழல்,இவற்றுடன் இப்போது தேர்தல் தில்லுமுல்லு என வரிசையாக குற்றச்சாட்டுகள் ப.சிதம்பரம் மீது இருந்தும் பிரதமர் மௌனமாகத்தான் இருக்கிறார்.ப.சிதம்பரமோ,'15வது லோக்சபாவில் உள்ள உறுப்பினர்கள் மீது இதுபோன்று 111 தேர்தல் வழக்குகள் உள்ளன.இந்நிலையில் நான் மட்டும் ஏன் பதவி விலக வேண்டும்?'' என்று நம்மை திருப்பி கேள்வி கேட்கிறார்.யார் என்ன சொன்னாலும் சரி,தான் ஜெயித்தாலும் தோற்றாலும் சரி,பதவியில் ஒட்டிக்கொள்ள முயலுவதே தனது முதல் பணியாக எண்ணுபவர்தாம் நமது உள்துறை அமைச்சர். அமெரிக்காவில் கடந்த மாதம் 16ம் தேதி லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஒபாமா அமைச்சரவையின் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த ஜான் பிரைசன் என்பவர் காரை ஓட்டிச் செல்லும் போது அருகில் இருந்த காரின் மீது இடித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.மறுநாளே பத்திரிகைகளில், 'காரை இடித்துவிட்டு நாகரீகத்திற்காகக் கூட மன்னிப்புக் கேட்காமல் சென்றுவிட்டார் மந்திரி' என்று செய்திகள் வெளியாயின. நம்ம ஊர் மந்தியாக இருந்திருந்தால்,பேப்பரை தூக்கிப் போட்டுவிட்டு சிரித்துக் கொண்டே போயிருப்பார். அமெரிக்க மந்திரியாயிற்றே,அடுத்த நாளே அவமானம் தாங்காமல் இராஜினாமா செய்துவிட்டார். நமது நாகரீகமும்,அரசியலும் உச்சாணிக் கொம்பில் கொடிகட்டிப் பறந்தபோது மனிதர்களே இல்லாத நிலப் பகுதிதான் அமெரிக்கா.ஆனால்,இப்பொழுது அவர்களது அரசியலையும்,நாகரீகத்தையும் பார்த்து நாம் வெட்கப்பட வேண்டி இருக்கிறது. அதற்கு காரணம் நமது தலைவர்கள். E.உதயகுமார்,நிர்வாக ஆசிரியர்

மாட்டு வண்டிக்காரனும் மத்திய அரசும்!ஜூன்-2012


பொதியேற்றும் மாட்டு வண்டிக்காரர்கள் அடிக்கடி செய்யும் காரியம் ஒன்று இருக்கிறது.அது,மாட்டின் கண்களில் படும்படி பத்து மூட்டைகளை வண்டியில் ஏற்றுவார்கள்.பிறகு,மாடு வண்டி இழுக்க முரண்டு பிடிக்கும் போது இரண்டு மூட்டைகளை இறக்கிவிடுவார்கள்.மாடும் பாரம் குறைந்ததென்று உற்சாகமாக வண்டியிழுக்கும்(உண்மையில் அவர்கள் ஏற்ற வேண்டியது எட்டு மூட்டைகள் தான் மீதி இரண்டும் டம்மி) நாட்டின் பொருளாதார சூழலின் அடிப்படைக் காரணியாக விளங்கும் பெட்ரோலை,லிட்டருக்கு 7.54 ரூபாய் ஏற்றிவிட்டு 2.50 ரூபாய் குறைக்கப் போவதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.(இந்த இதழை நீங்கள் படிக்கும் போது அநேகமாக இரண்டு மூட்டை இறங்கியிருக்கலாம் .ஸாரி,இரண்டு ரூபாய் குறைந்திருக்கலாம்).ஒரு மாட்டுவண்டிக்காரனின் சாமர்த்தியத்தோடு செயல்பட்டு வரும் மத்திய அரசை எத்தனை பாராட்டினாலும் தகும். ஒரு முறை இரு முறை அல்ல.மன்மோகன்சிங் அரசு ஆட்சிக்கு வந்து பதினோராவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருகிறது.தினமும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கோடிகணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக மத்திய அரசு வழக்கமான பாட்டையே பாடி வருகிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏன் நஷ்டம் ஏற்படுகிறது?நிச்சயம் அதற்க்கு வாய்ப்பில்லை. கச்சா எண்ணெயின் தற்போதைய விலை பீப்பாய் ஒன்றுக்கு (160 லிட்டர்)105 அமெரிக்க டாலர்கள்.அதாவது ரூ.5,775.ஆக,ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் விலை ரூ.36.09 தான்.இவற்றோடு சுத்திகரிப்பு செலவு ரூ.0.52,மூலதனச் செலவு ரூ.6.00,போக்குவரத்துச் செலவு ரூ.6.00,முகவர் கழிவு ரூ.1.05 என எல்லாவற்றையும் சேர்த்தால் கூட,ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.49.66 தான் ஆகிறது. இந்த லட்சணத்தில்,பெட்ரோலுக்கு மானியம் தருகிறோம் என்று மாய்ந்து,மாய்ந்து பேசுகிறார்கள்.மானியம் கிடக்கட்டும்,அரசு கூடுதல் வரிகள் போடாமல் இருந்தால் போதாதா?மத்திய அரசு சுங்க வரி,உற்பத்தி வரி என்று ஒரு புறமும்,மாநில அரசு விற்பனை வரி,மதிப்பு கூட்டு வரி என்று இன்னொருபுறமும் போட்டுத் தாக்க, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.77.53க்கு வந்து நிற்கிறது.இப்படி ஒரு கடுமையான விலை உயர்வை இந்திய மக்கள் கேள்விப்பட்டதில்லை.மறுநாள் முதல் விலை உயர்வு என கேள்விப்பட்டதும்,முதல்நாளே நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நின்று.முடிந்த வரையில் வாகனங்களில் பெட்ரோலை நிரப்பிக் கொள்வதுதான் நமது அதிகபட்ச சாமர்த்தியம். ஒரு பெரிய கோட்டின் அருகே.இன்னொரு பெரிய கோட்டைக் கிழித்து முந்தைய கோட்டை சிறியதாகக் காட்டுவது போல,இந்த விலை உயர்வை விட இன்னும் கடுமையான விலை உயர்வு வரும்.ஒரு லிட்டருக்கு ரூ.25,ரூ.30 என்று விலை ஏற்றி,சில பல பேச்சுவார்த்தைக்குப் பிறகு,ரூ.2 குறைக்கக் கூடும்.அப்போது நாம் அமைதியாகவே இருப்போம்.முடிந்தவரை அன்று மட்டும் டேங்கை நிரப்பிக்கொள்வோம். நாம் மாடுகளாக இருக்கும் வரை மத்திய அரசு மாட்டு வண்டிக்காரனாகத்தான் இருக்கும்.மாற்றமிருக்காது. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

மனது வைக்குமா மத்திய அரசு?மே-2012


கிபி.1246,வெள்ளையர்களும் அவர்கள் சார்ந்த விஷயங்களும் இந்திய மண்ணில் கால் பதிக்காத காலகட்டம் அது.சுமார் 70 க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய சிறு இராஜ்ஜியம் ஒன்றிற்கு மன்னனாக இருந்தவன் சோழ வம்சத்தின் விளிம்பில் இருந்த மூன்றாம் இராஜராஜன்.செல்வச்செழிப்பில் நடுத்தரமாக இருந்த அவனது இராஜ்ஜியத்தின் மீது மாறவர்மன் சுந்தரபாண்டியன் போர் தொடுத்த போது,அவனிடம் சரண்டராகி,மாதம் தோறும் கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான் இராஜராஜன்.இரு ஆண்டுகள் கழிந்த பிறகு கடுமையான பஞ்சத்தில் அகப்பட்டது இராஜராஜனின் தேசம்.மழையின்றி தானியக்கிடங்கில் சேமிப்புகள் இல்லை,கால்நடைகளும் மடிந்து போயின.அந்த சூழ்நிலையிலும் தான் செலுத்த வேண்டிய கப்பத்தொகையை சேனாதிபதி மூலம் கொடுத்தனுப்பினான் இராஜராஜன். கப்பத் தொகை கொடுத்த வேகத்தில் திரும்பி வந்தது.கூடவே இரண்டாயிரம் கால்நடைகளும்,100 பெரிய கலன்கலில் தானியங்களும்,40க்கும் மேற்பட்ட பார வண்டிகளில் ஆடைகளும் அணிவகுத்து நின்றன. சேனாதிபதி கையில் சுந்தரபாண்டியன் கொடுத்தனுப்பிய ஓலை.அதில் சுந்தரபாண்டியன் கீழ்கண்டவாறு எழுதியிருந்தான்.'அன்பு இராஜராஜா! தங்களது தேசம் பசி,பிணி,பஞ்சத்தில் சிக்கித்தவிக்கும் இந்த சூழலிலும் தவறாது கப்பம் செலுத்திய உங்கள் நேர்மை கண்டு வியந்தேன்.இருப்பினும்,எரியும் வீட்டில் பிடுங்குவதா தர்மம்? உங்களது நாட்டின் சூழ்நிலை சீராகி விட்ட பிறகு,கப்பம் தந்தால் போதும்.நான் அனுப்பியிருக்கும் கால்நடைகளையும்,தானியங்களையும்,தயைக் கூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்'என்று எழுதியிருந்தான் சுந்தரபாண்டியன். தன்னிடம் கப்பம் கட்டும் சிறு அரசனாக இருந்தாலும் கூட,அவனது தேசத்தின்பாற்,குடிமக்களின் பாற் நேசம் கொண்டிருந்த சுந்தரபாண்டியனை படித்ததும்,எவ்வளவு முயன்றும் நம்மால் மத்திய அரசினையும்,மாநில அரசினையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்கள் ஒரு மாநிலத்தில் இல்லை என்றால் அந்த மாநிலத்தை மத்திய அரசு ஆதரிப்பதில்லை என்பது தொன்றுதொட்டு வரும் மரபு.வேண்டிய அளவு நிதி தராமல் இருப்பதும்,இயற்கை பேரிடர்களுக்கு உதவாமல் இருப்பதும்,புதிய நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதும் ஆகிய இச்செயல்கள் மூலம் ஒரு மாநிலத்தின் குடிமக்களுக்கு மத்திய அரசு ஏன் நேசத்தை காட்ட முன்வருவதில்லை என்பது புதிராகவே இருக்கிறது, இன்னும் சில நாட்களில் மின் உற்பத்தியை தொடங்க இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு மீண்டும் மீண்டும் கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.ஆனால்,மத்திய அரசிடம் இருந்து பதில்தான் வரவில்லை.நமது மாநிலத்தில்,நமது இடத்தில்,அணுஉலை அச்சங்களுக்கு இடையே கிடைக்கின்ற மின்சாரம் தமிழக மக்களுக்குச் சொந்தமில்லை என்பது அநீதியாகும்.கூடங்குளம் மின்சாரத்தை தமிழக மக்களுக்கே பெற்றுத்தரும் முயற்சியில் தன்னந்தனியாக முதல்வர் ஜெயலலிதா குரல் கொடுத்து வருகிறார்.அவருடன் சேர்ந்து குரல் கொடுப்பது நமது கடமையாகும். ஒரு வேளை அதற்கும் செவிசாய்க்கவில்லை எனில்,போரிட்ட பகைவனிடம் நேசம் காட்டிய சுந்தரபாண்டியனின் கதையை யாரவது மொழி பெயர்த்து பிரதமரிடம் தெரிவித்தால் ஒருவேளை மனது வைக்கலாம் மத்திய அரசு. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

பாராட்டுக்கு உரியதா பட்ஜெட் ?-ஏப்ரல்-2012


இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் என்னென்ன பொருட்களின் விலை ஏறுமோ?என்று கையைப்பிசைந்துக் கொண்டிருந்த மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி விட்டார்கள்.வழக்கம் போல கார்கள் மற்றும் ஆடம்பரச் சாதனங்களின் விலையை உயர்த்தியிருக்கிறார்கள்.அதே சமயம் பூட்டுகள்,தீப்பெட்டிகள்,பால் புட்டிகளின் விலைகள் குறைத்துவிட்டோம்(!) என்று கடுப்பேற்றி இருக்கிறார்கள். எலெக்ட்ரிக் பைக்குகளின் விலையும் குறையப் போகிறதாம்.( தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் பைக் எத்தனை பேர்(!) வைத்திருக்கிறார்கள்)விலை குறையவேண்டியது இவை மட்டும் தான் என நினைத்து விட்டார்கள் போலும். தமிழக மக்களின் வாழ்க்கை நிலையை சமநிலைப்படுத்தும் அறிவியல் பூர்வமான பட்ஜெட்டை எதிர்பார்த்து இருந்த நமக்கு,இலவசங்களுக்காக மட்டுமே ரூ.22 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டதுமே 'புஸ்'என்று ஆகிவிட்டது. தேர்தல் அறிக்கை புத்தகம் போன்று,பட்ஜெட் அறிக்கையை தயார் செய்வது நமது மாநிலத்தில் மட்டும்தான் போலும். என்றாலும்,எந்த ஆண்டு பட்ஜெட்டிலும் இல்லாத அளவிற்கு இம்முறை நமது கட்டுமானத்துறை பக்கம் கருணை காட்டியிருக்கிறார்கள்.குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினருக்காக கட்டப்படும் வீடுகளுக்கு தளப்பரப்புக் குறியீடு (FSI) கூடுதல் கட்டணமின்றி அதிகரிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு நிச்சயம் வீடுகளின் விலையை 10% முதல் 20% வரை குறைக்க வழி செய்யும்.மேலும்,வீட்டு வசதி கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட அளவு வட்டி தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதும் பாராட்டுக்குரியது. அடுத்ததாக,புதிய வழிகாட்டு மதிப்பீடுகள் அமலுக்கு வரும் என தெரிவித்திருக்கிறார்கள்.அதே சமயம்,முத்திரை தாள் கட்டணத்தை 6% லிருந்து 5% ஆக குறைத்திருக்கிறார்கள் மற்றபடி, பொதுப்பணித்துறைக்கும்,நெடுஞ்சாலைத்துறைக்கும் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்து அசத்தியிருக்கிறார்கள்.இவற்றைப் பாராட்ட 'பில்டர்ஸ் லைன்' கடமைப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பட்ஜெட் அறிக்கைக்கு நிகராக மக்களைக் கவர்ந்த இன்னொரு விஷயம் 'தொலைநோக்குத்திட்டம்-2023' என்பதுதான்.அடுத்த 10 ஆண்டுகளில்,தமிழக மக்கள் கல்வி,மருத்துவம்,வேலைவாய்ப்பு,குடிநீர்,தொழில்,வேளாண்மை உள்ளிட்ட எல்லாத்துறைகளிலும் ஒட்டு மொத்த வளர்ச்சியைப் பெற இது வழி வகுக்கும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டில்'குடிசைகளே இருக்காது','கல்வித்தரம் உயரும்','சாலை போக்குவரத்து சர்வதேசதரத்திற்கு மேம்படும்','தமிழகத்தின் முக்கிய 10 நகரங்கள் உலகத்தரத்திற்கு இணையான வசதிகளை பெறும்' என்றெல்லாம் அதில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால்,எத்தனையோ,கவர்ச்சிகரமான திட்டங்களை கேட்டு ஏமாந்து போன தமிழக மக்களை,இன்னமும் காத்திருக்கச்செய்யாமல்'தொலைநோக்குத் திட்டம் -2023'-ஐ நடைமுறைப் படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.திட்டப்பணிகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை வெளிப்படையாக்க வேண்டும். இல்லையெனில்,இது மக்களுக்கான திட்டம் அல்ல.2023 வரை தனது கட்சி ஆட்சியை நிலைநிறுத்தச் செய்வதற்கான வழிமுறைத் திட்டம் என மக்கள் நினைத்து விடும் அபாயம் ஏற்பட்டுவிடும். E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

கொள்ளையர்களின் சொகுசு வாசஸ்தலம்-மார்ச்-2012


தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு,சட்ட மன்றத்தில் பேசியபோது அவர்கள் சொன்ன வார்த்தைகள் அநேகமாக பலருக்கும் நினைவிருக்கலாம்.'நான் முதல்வராக பொறுப்பேற்கிறேன் என்று தெரிந்த பிறகு இங்குள்ள திருடர்கள்,கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு சென்றுவிட்டனர்' (ஆந்திரா மீது அப்படி என்ன கோபமோ!) என்று பெருமையாக கூறினார்.ஆனால்,உண்மையில் நடந்தது வேறு.எல்லா மாநில திருடர்களும்,கொள்ளையர்களும் வழி விசாரித்து தமிழகத்திற்கு வந்து சேர்ந்துவிட்டனர். திருப்பூர்,மதுரை,உடுமலைப்பேட்டை,சென்னை என கொள்ளையர்களின் பரப்பு விரிந்து கொண்டே போக,நிலக்கொள்ளை,கல்விக்கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கொள்ளைகளுக்கு ஆட்பட்டு போயிருந்த தமிழக மக்களுக்கோ இந்த நேரடிக் கொள்ளை இன்னும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. கடந்த 10 மாதங்களாக அட்டகாசம் செய்து கொண்டிருந்த கொள்ளையர்களில் வெகு சிலரே பிடிபட்டு இருக்கிறார்கள் என்பதும்,வெகு சில உடமைகள் மட்டுமே மீட்கப்பட்டு இருப்பதும் வருந்தத்தக்க செய்தி. சென்னை வேளச்சேரியில் ஒரு வீட்டினை வாடகை எடுத்து தங்கி,தினசரி வேலைக்கு செல்வதைப்போல வேளச்சேரிக்கு அருகே இருக்கும் பெருங்குடியிலும்,கீழ்கட்டளையிலும் கொள்ளையடித்துவிட்டு, வீட்டிற்குள் வந்து சாவகாசமாக படுத்துக்கொள்கிறார்கள் என்கிற அளவிற்கு கொள்ளையர்களின் சொகுசு வாசஸ்தலம் ஆகிவிட்டது தமிழ்நாடு.(குற்றம் நடந்த இடத்திலிருந்து வெறும் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பில் சுற்றிக்கொண்டிருந்த குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு ஒரு மாதம் ஆகிவிட்டது என்பது வேறு விஷயம்) ஆனால்,இந்த வரிசையான கொள்ளைகளுக்கு அரசின் அஜாக்கிரதை மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது. யார் வாடகைக்கு குடி வந்தால் என்ன?அவர் என்ன பணி செய்தால் நமக்கு என்ன?என்கிற எண்ணம் பொதுவாக வீட்டு உரிமையாளர்களுக்கு உள்ளது. அதாவது காலம் காலமாக அதே தெருவில் குடியிருக்கும் நபர் ரூ.5000 வாடகைக்கு கேட்கிறார் என்றால்,அவரை விடுத்து ரூ.10,000 வாடகை தருவதாக சொல்லும் முன்பின் தெரியாத,பீகார் போன்ற வட மாநிலக்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதுதான் அதிக வாடகை கேட்கும் வீட்டு உரிமையாளர்களின் விருப்பமாகும். வங்கிகளுக்காகவும்,நகைக் கடைகள் போன்ற வணிக வளாகங்களுக்காகவும் கட்டிடங்கள் அமைக்கப்படும் போது,அதற்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து கட்டித்தர கட்டுநர்கள்,காண்ட்ராக்டர்கள் முன்வர வேண்டும்.இதற்கென ஆகும் கூடுதல் செலவை வாடகைதாரர்கள் அல்லது கட்டிட உரிமையாளரிடமிருந்து கட்டுநர்கள் பெற்றுக் கொள்ளலாம். மூன்றாவதாக,பொதுமக்கள் ஆகிய நம்மை விட எல்லா இடங்களிலும் பரவி இருக்கும் முழு நேரக் கண்காணிப்பாளர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.நாம்தான்,நம் அருகே நிலவும் குற்றங்கள் பற்றியும்,குற்றம் ஏற்படக்கூடிய சூழல் குறித்தும்,ஐயத்திற்கு இடமானவர்கள் பற்றியும் உரிய இடத்தில் தகவல் தர முன்வர வேண்டும். இந்த மூன்றும் ஒருங்கிணைந்து அமைந்தால் தான் எங்கோ நடந்த குற்றங்கள் நம் ஜன்னல்களுக்கு அருகே கூட நடக்கக் கூடும் என்கிற அபாயத்திலிருந்து நாம் காப்பாற்றப்படுவோம். E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

அபாயகரமான அரசு கட்டிடங்கள்-பிப்ரவரி-2012


கடந்த ஜனவரி -15ம் தேதி பொங்கல் திருநாளன்று நள்ளிரவு நேரம் சென்னை எழிலகக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது என்கிற செய்தி அரசுத்துறை அதிகாரிகள்,ஊழியர்களுக்கு மட்டுமன்றி,பாரம்பரியமிக்க நினைவுச்சின்னங்களை விரும்பும் அனைவருக்கும் வருத்தமான செய்திதான். பாரம்பரியமிக்க கட்டிடங்களை வெறுமனே கிடங்குகளாகவும்,முட்புதர்களாகவும் வைத்துக்கொள்ள நம்மால் மட்டுமே முடியும்.ரோம் நகரில் இன்றளவும் உள்ள கட்டிடங்களில்,ஏறத்தாழ 60 சதவிகிதத்திற்கு மேலான கட்டிடங்கள் இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவைதான்.ஆனால்,அவற்றை தங்கள் அடையாளமாகவும்,தங்கள் கலாச்சாரத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகவும் பேணி பாதுகாத்து வருகின்றார்கள்.நமக்குத்தான் இத்தனை அலட்சியம். பாரம்பரியமிக்க கட்டிடங்களை விடுங்கள்.சாதாரணமாக அரசுக்கட்டிடங்களில் ஒருசிலவற்றை தவிர,பெரும்பாலான கட்டிடங்கள் பராமரிப்பின்றி,தகுந்த பாதுகாப்பின்றி,தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இன்றி,அபாயகரமான கட்டிடங்களாக இருப்பதை நாம் கண்கூடாக காணமுடியும். மிகவும் முக்கியமான ஆவணங்கள் எழிலகக் கட்டிட தீவிபத்தில் எரிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். சரிதான்.எல்லா ஆவணங்களையும்,மேஜையின் மீதும்,வரவேற்பறையிலும் வைத்திருந்தார்கள் போல. வருகை பதிவேடுகள்,சம்பள விவரங்கள்,பணி விவரங்கள்,ஊழியர் நடத்தைக் குறிப்புகள் உள்ளிட்ட எந்த பதிவேடுகளுமே கிடைக்கவில்லை என சாதரணமாகச் சொல்கிறார்கள்.முக்கியமான ஆவணங்களுக்கு இன்னமும் மர பீரோதான் பாதுகாப்பானது என்று கருதும் அதிகாரிகளுக்கு எரிந்து போனது என்னென்ன? எத்தனை கோடி மதிப்பிலான ஆவணங்கள்?எத்தனை வருட ஆவணங்கள்?எவ்வளவு மனித உழைப்பு? என்பது பற்றியெல்லாம் கவலையில்லை.கடைசி வரை தீவிபத்து எப்படி நடந்தது என்பதை எந்த ஏடுகளிலும் தெரிவிக்காத அதிகாரிகளா உண்மை நிலையைச் சொல்லப் போகிறார்கள்?. காவல் நிலையங்கள்,பத்திரப்பதிவு அலுவலகங்கள்,மின்வாரிய அலுவலகங்கள்,இன்னும் மாவட்டம் தோறும் பல்வேறு துறை சார்ந்து இயங்கி வருகின்ற,எல்லா அரசுக்கட்டிடங்களுக்குமே இதே நிலைமை வேறு எந்த மாநிலத்திலும் காணப்படவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். 'பிளான் அப்ரூவலு'க்கு ச்செல்லும் கட்டுநர்களையும்,ரங்கநாதன் தெரு போன்ற நெரிசலான தெருக்களில் உள்ள கட்டிடங்களுக்கு மட்டும் ஏகப்பட்ட கெடுபிடிகளைச் சொல்லும் சி.எம்.டி.ஏ.மற்றும் டி.டி.சி.பி.போன்ற அரசுக் கேந்திரங்கள்,இது போன்ற அரசு கட்டிடங்களை எப்போதாவது ஆய்வு செய்திருக்கிறதா? தீ விபத்துக்கள் ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வது?விடுமுறை நாட்களில் கட்டிடப் பாதுகாப்பினை எவ்வாறு மேற்கொள்வது என்பவை பற்றி யோசித்திருக்கிறதா?என்பது மக்களின் மில்லியன் டாலர் கேள்வி. தனியார் கட்டிடங்களில் பாதுகாப்பு விதிகளை வரையறுக்கும் அரசு,அரசுக் கட்டிடங்களுக்கும் அவை பின்பற்றப்படச் செய்ய வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு. பொங்கல் திருநாளில் உயிர்நீத்த தீயணைப்பு வீரர் திரு.அன்பழகன் அவர்களுக்கு நமது வீர வணக்கங்கள். E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

வசூல் வேட்டை-ஜனவரி-2012


2012 ல் கட்டுமானத்துறை எப்படி இருக்கும்? என்று யோசித்தால், ஆச்சரியக்குறிகளைவிட,கேள்விக்குறிகளே அதிகம் நம் முன் வந்து நிற்கின்றன. வழக்கமாக கட்டுமானத்துறையில் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம், தொழிலாளர்கள் பற்றாக்குறை ஆகிய இவைதான் பெரும் பிரச்சனைகளாக இருக்கும். ஆனால்,வெளியே சொல்லப்படாத, கட்டுமானத்துறையின் கழுத்தை நெரிக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று இருக்கிறது. அதுதான்'ஸ்கொயர் ஃபீட்' கட்டிங்'அதாவது ஒவ்வொரு சதுர அடிக்கும் இவ்வளவு என கணக்கிட்டு,அரசியல்வாதிகள் கையூட்டாகப் பெறுவதுதான் 'ஸ்கொயர் ஃபீட்' கட்டிங்'. இது எந்த அரசு விதிகளுக்கும்,அரசு ஆவணங்களுக்கும் அகப்படாதது.மிகமுக்கியமாக அரசின் கஜானாவிற்கு சென்று சேராதது. கட்டிடங்களில் சாதாரண கட்டிடம்,சிறப்புக்கட்டிடம்,(SB) பன்னடுக்கு வளாகக் கட்டிடம்(MSB) என மூன்று வகை உண்டு.இவற்றில் பெரும்பாலும் நமது கட்டுநர்கள் கட்டுவது, சிறப்புக் கட்டிடம்,பன்னடுக்கு வளாகக் கட்டிடம் ஆகியவைதான். சென்ற அரசுக் காலத்தில்,சாதாரண கட்டிடம்,சிறப்புக் கட்டிடம் ஆகியவற்றிற்கு எந்த வித கையூட்டும் பெறப்படவில்லை.ஆனால்,பன்னடுக்கு வளாகக் கட்டிடத்திற்கு மட்டும் சதுர அடிக்கு ரூ.10 என,விலை நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டு வந்தது. வேறு வழியில்லாத கட்டுநர்களும்,அதை கஷ்டப்பட்டு செலுத்தி காலத்தைக் கடத்தினர். காலம் மாறியது,2011 தேர்தல் வந்தது.ஆட்சியும் மாறியது.இனி.அந்த 'கட்டிங்' செலுத்த தேவையிருக்காது என்று மகிழ்ந்திருந்த கட்டுநர்களுக்கு,பேரிடி இறங்கியது. சிறப்புக் கட்டிட வகை சதுர அடிக்கு.ரூ.50,பன்னடுக்கு வளாகக் கட்டிட வகை ரூ.100 செலுத்த வேண்டுமென கட்டாய வசூல் வேட்டை நடந்து வருகிறது. கட்டுமான அனுமதி அளிக்கும் அரசு கேந்திரங்களை,கைக்குள் வைத்துக்கொண்டு நடைபெறும் இந்த வசூல் வேட்டையில் தமிழகத்தின் ஒட்டு மொத்த கட்டுமானத்துறையே சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்த'கட்டிங் ஃபீஸ்'கொடுத்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக பில்டர்கள் குமுறுகிறார்கள். அரசியல் பிரமுகர்கள் மூலமாக நடைபெறும் இந்த வசூல் வேட்டைக்கு ஒத்துவராத கட்டுநர்களின் புராஜெக்டுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.புராஜெக்டுகள் நிறுத்தப்பட்ட செய்தி வெளியே கசிந்தால்,வீடுகள் விற்பனை ஆகாது,புக்கிங் ஆன வீடுகளும் கேன்சல் ஆகிவிடுமே என்று எண்ணி,நமது கட்டுநர்கள் வேறு வழியின்றி இந்த அநியாய கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள். சதுர அடிக்கு ரூ.50,ரூ.100 என இவர்களுக்கு கட்டிங் கொடுத்துவிட்டு,இந்த தொகையை சரிகட்ட,கடைசியாக விற்பனை விலையை உயர்த்த வேண்டி இருப்பதாக பரிதாபத்தோடு புலம்புகின்றனர் பில்டர்கள்.இதனால்,சதுர அடி விலையுயர்வு எக்கச்சக்கமாக எகிறி,நடுத்தர மக்களின் நீண்ட நாள் ஆசையை வெறும் பகற்கனவாக்கி விடுகின்றன. ஒரு நாட்டின் தோற்றத்தையே மாற்றிக் காட்டும் கட்டுநர்களை நெருக்கும்,இந்த அநியாய வசூல் வேட்டையை உடனே நிறுத்தச்செய்து,நாட்டின் முதன்மை துறையான கட்டுமானத்துறைக்கு,இந்த அரசு உதவிட வேண்டும் என்பது கட்டுநர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, பொது மக்களின் எண்ணமும் கூட. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

மழையின் உத்தரவு!டிசம்பர்-2011


சனி நீராடு!அட ஒளவையே,இங்கு நீரல்லவா எங்களை நீராடி விட்டது! -ஏதோ ஒரு கவிஞனின் இந்த வரிகளை எங்கோ,எப்போதோ படித்தாற்போல் ஞாபகம்,ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் மழைக்காலங்களில் தப்பாது நினைவுக்கு வருகிறது. மழை என்கிற விஷயம் நமக்கு எப்போதும் ரசிப்புக்குரியதாக இருந்தது கிடையாது.நன்றாக குலுக்கி திறக்கப்பட்ட பாட்டில் சோடாவைப் போல தங்காமல் சென்றுவிடுகிறது மழை வெள்ளம். தமிழ்நாடு என்கிற ஒரு மொத்த அந்த மாநிலத்தையே மழை வெள்ளம் தனித்தனி தீவுகளாக்கிவிட்டது.தமிழகத்தின் எந்த ஒரு மூலையிலிருந்தும் இன்னொரு மூலைக்கு நீங்கள் கைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.வாழ்க தொழிற்நுட்பம்!.ஆனால்,உங்கள் தெருவிலிருந்து பக்கத்துக்கு தெருவில் இருக்கும் நபரை நேரில் சென்று சந்திப்பதற்கு பாதை இல்லை.வீட்டில் பரண்கள் வரை தண்ணீர் நிரம்பி விட்டது.ஆனால் நிரம்ப வேண்டிய கோயில் குளங்கள் இன்னும் வெறுமையாகவே இருக்கின்றன.இந்த அதிசயமான முரண்கள் நம் நாட்டில் மட்டுமே சாத்தியம். யானைகள் வரும் பாதையிலும்,ஆறுகள் செல்லும் பாதையிலும் வீடுகளை உருவாக்குவது நமக்கு கை வந்த கலை,அதனால்தான் களிறும் சரி காட்டாறும் சரி நம் இல்லங்களை துவம்சம் செய்து விடுகின்றன. ஒரு மிகப்பெரிய அழிவுகளுக்கு பேதமில்லை.அது உலகின் எங்கும்,எப்போதும்,எவர் ஆட்சியிலும் வந்தே தீரும்.அண்மைக்கால சுனாமியில் அகப்பட்ட ஜப்பானியர்களால் எல்லாவற்றையும் மீண்டும் சரிகட்ட ஆறு வாரங்கள் போதுமானதாக இருந்தது.ஆனால் இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே பருவமழை பதம் பார்த்த தமிழ்நாட்டில் நகரங்கள்,கிராமங்கள்,மீண்டும் சரியாக பலமாதங்கள் ஆகும் என்கிறார்கள். ஜப்பானுக்கு மட்டும் ஏன் சுனாமியும் சிறுமழையாகிறது?நமக்கு மட்டும் ஏன் மழையும் சுனாமியாகிறது,?நிதி பற்றாக்குறை,தொழில்நுட்பம் குறைவு.மனித சக்தி குறைவு என்று வேற்று வாக்கியங்களை இதற்கு பதிலாக சொல்ல முடியாது. மனிதனின் வாழ்வாதாரத்திற்கு பயன்படாமல்,மழைநீர் அவனது வாழ்வாதாரத்தை பறிக்குமானால் உலகின் எந்த நாட்டிலும் அங்கு எத்தனை தொழிற்நுட்பம் வளர்ந்தும் பயனில்லை.மண்ணிலிருந்து விண்ணுக்கு பலப்பல செயற்கைக்கோள்கள் அனுப்பும் சக்தி வாய்ந்த நாடாக இருந்தாலும்,நாட்டின் உள்கட்டமைப்பு மேம் படுத்தாவிட்டால் அங்கு எத்தனை தொழிற்நுட்பம் இருந்தும் பலனில்லை. நமது தொழிற்நுட்பத்தையும், உள் கட்டமைப்பினையும் சரி செய்து கொள்ள மழை நமக்கு உத்தரவிட்டிருக்கிறது.கீழ்படிந்துதான் ஆகவேண்டும். E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

நல்லாட்சியைத் தருமா உள்ளாட்சிகள்?அக்டோபர்-2011


மக்களுடன் நேரடித்தொடர்பு என்ற வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எப்போதும் ஒரு முக்கியத்துவம் உண்டு.மாநகரங்கள்,நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதி,குடிநீர்,கழிவுநீர்,தெரு விளக்கு,சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவற்றை திறம்பட செயல்படுத்துவதற்காகத்தான் இந்த உள்ளாட்சி அமைப்புகள். ஆனால்,தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் துவங்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும் இவற்றை எல்லாம் முழுமையாக நாம் பெற்றிருக்கிறோமா?அவ்வளவு ஏன் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் நடைபெறும் கூட்டங்கள் மிகவும் அமைதியாக நடந்து முடிந்தன என்கிற செய்தியையாவது நாம் கேள்விப்பட்டிருக்கிறோமோ?அமர்வதற்காக போடப்பட்ட நாற்காலிகள் வலமும் இடமும்,மேலும் கீழுமாக யார் மேலேயாவது வீசப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.செருப்புகளும்,மைக்குகளும் கூட எப்போது யார் மீது வீசப்படுமோ என்ற பயம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. தங்களுடைய உரிமை பிரச்சனையை நிலை நாட்டுவதற்காகவோ,தங்கள் சொந்தப்பிரச்சனைகளை பேசி பெரிதாக்குவதற்காகவோதான் பெரும்பாலும் உள்ளாட்சியமைப்புக் கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கிடையே,மக்களின் வாழ்வாதரங்களை மேம்படுத்தும் நல நோக்கத்துடன் நடத்தப்படும் உண்மையான உள்ளாட்சிக் கூட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பதை நாம் மறுக்க முடியாது.ஆனால் நாம் பேசுவது பெரும்பான்மை கூட்டங்கள் பற்றி. மக்கள் தொகையும்,போக்குவரத்தும் பெருகிப்போன இக்காலகட்டத்தில் மற்றுமொரு உள்ளாட்சி தேர்தலை நாம் சந்திக்க இருக்கிறோம்,இச்சூழ்நிலையில் உள்ளாட்சி அமைபுகளின் ஆட்சி செயல்பாடுகளில் அவசியம் வரவேண்டிய மாற்றங்களாக மக்கள் எதிர்பார்ப்பவை ஏராளம் இருக்கின்றன அவற்றில் சில: சாதாரண தூறல் மழைக்கே அடைத்துக்கொள்ளும் கழிவுநீர் வடிகால்களின் நிலைமை மாற வேண்டும்.சாலையோரங்கள் சுத்தம் செய்யப்படாமலே ப்ளீச்சிங் பவுடரை மட்டும் தூவிவிட்டு போகிற பொறுப்பற்ற செயல்கள் மாறவேண்டும்.பச்சிளம் குழந்தைகள் பிறக்கும் மகப்பேறு மருத்துவ மனைகள் நம் மாநிலத்தில் பெரும்பாலும் குப்பைக் கூடங்களாக காட்சியளிக்கும் சீர்கேடுகள் மாற வேண்டும்.திருட்டுக்கு உதவும் எரியாத தெருவிளக்குகள் சரி செய்யப்படவேண்டும். போக்குவரத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் காலை பத்துமணிக்கு மேல் குப்பைகளையும்,கழிவுகளையும் அகற்றும் மெத்தன ஊழியர்களும்,பொறுப்பற்ற அதிகாரிகளும் மாற வேண்டும்,போக்குவரத்திற்கு உதவும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைகள் அகலமாக்கப்படவேண்டும். இவை எல்லாம் மாறினால் தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலுக்கும் ஒரு உண்மையான அர்த்தம் இருக்கும்.இல்லையெனில்,பொதுத்தேர்தலில் எம்.எல்.ஏ, சீட்டு கேட்டு கிடைக்காதவர்களுக்கு கிடைக்கும் இன்னொரு வாய்ப்பு என்ற அளவிலேயே உள்ளாட்சி பதவிகள் அமைந்து விடக்கூடும். E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

அசராத அன்னா ஹசாரே!செப்டம்பர்-2011


காலை 11 மணிக்கு துவங்கி மதியம் 3 மணிக்கு முடிந்து போகும் முதல்வர்களின்,சென்னைக் கடற்கரை தமாஷ் உண்ணாவிரதங்கள் மட்டுமே அறிந்த நமக்கு அன்னா ஹசாரேவும் புதுசு.அவரது உண்ணாவிரதமும் புதுசு.'ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளையும்,அரசியல்வாதிகளையும் லோக்பால் மசோதா விசாரணையின் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும்,அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும்.அவர்களின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யவேண்டும்'என்று தனி மனிதனாக சப்பனமிட்டு அமர்ந்து,உண்ணாவிரதத்தைத் தொடங்கிய அன்னா ஹசாரேவுக்கு இன்று ஆதரவாளர்களின் எண்ணிக்கை பல கோடிகளைக் கடந்துவிட்டது. ரூ.1லட்சத்து 76,000 கோடியை விழுங்கிவிட்டு ராஜினாமா செய்யக்கூட முன்வராத மனசாட்சியற்ற அரசியல்வாதிகள் இருக்கும் இந்த தேசத்தில் அன்னா ஹசாரேக்களை வளர விடுவார்களா?.அவர் மீது 2.20 லட்சம் அறக்கட்டளை மோசடி,உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுப்பு.சிறையில் அடைப்பு,போராட்டத்தில் வன்முறையாளர்கள் ஊடுருவல் என்று ஹசாரேவின் அறப்போராட்டத்தையும்,ஆதரவாளர்களையும் கலைக்கப் பார்த்தது டில்லி அரசு. 300 ரூபாய்க்கும்,இரண்டு பொட்டலம் சிக்கன் பிரியாணிக்கும் வந்திருந்த கூட்டம் எனில்,அது எப்போதோ சிதறியிருக்கும்,தாய்த்திருநாட்டினை கருப்புப்பண முதலைகளிடமிருந்து காக்கும் கடைசி முயற்சிக்கு களம்புகுந்த கூட்டம் அல்லவா?அங்குலம் கூட அசைக்க முடியவில்லை. ஒரு சாதாரண குடிமகனுக்கு ஹசாரேவின் போராட்டம் புரியாமல் போகட்டும்.(அப்படிதானே அவனுக்கு ஸ்பெக்ட்ரம் 3ஜி ஊழல் புரியாமல் போனது?)ஆனால்,'ஊழல்வாதிகளின் சொத்துக்களை கையகப்படுத்தவேண்டும்'என சொல்லும் ஹசாரே வார்த்தைகளின் பொருள் என்ன தெரியுமா?வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரூ.1,456 லட்சம் கோடி,இந்தியாவிற்கு திரும்ப வரும் என்பதுதான். 'அத்தனை பணமும் திரும்பி வந்தால் என்ன நடக்கும்?'என அண்மையில் செல்போன் மூலம் உலவிய ஒரு குறுஞ்செய்தி நாட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இந்தியா,பொருளாதாரத்தில் நெ.1 நாடாகத் திகழும்.டாலர்,யூரோக்கள் இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிடப்படும்,இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.60,000 கோடியும், ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ.100 கோடியும் கிடைக்கும்.அடுத்த 20 ஆண்டுகளில்,நாம் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.பெட்ரோல் ரூ.25ம்,டீசல் ரூ.15ம்,பால் ரூ.8 ஆகவும் குறையும்.இதுதான் அந்த குறுஞ்செய்தி தந்த தகவல். ஊழலுக்கு எதிராய் போராட இந்த தருணத்தை விட்டால்,அடுத்த தருணத்திற்கு நாம் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.இல்லை அடுத்த தருணமே வாய்க்காது போகும். அன்னா ஹசாரே சொன்னதுபோல இது இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டம்.உண்மையில் நாம் தேசப்பற்றுள்ள இந்தியனாய் இருந்தால்,இந்த ஊழலுக்கு எதிரான சுதந்திர போராட்டத்திற்கு நம் கரங்களை உயர்த்தி ஒருமுறையாவது அன்னா ஹசாரேவிற்கு ஜே சொல்லி ஆகவேண்டும். பிற ஊழல்வாதிகள் அதற்கு பதில் சொல்லி ஆகவேண்டும். E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

நில முழுங்கிகள்-ஆகஸ்ட்-2011


குலசேகர பாண்டியனின் சமஸ்தானத்தில் நடந்த ஒரு சம்பவம்.அண்டை நாட்டு மன்னர்களை பின்னிப் பெடெலெடுத்ததில்,மகிழ்ந்து போன பாண்டியன் தனது படை வீரர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கினான். அதில் ஒரே ஒரு வீரன் மட்டும்,'நகையும் வேண்டாம்,பணமும் வேண்டாம் நிலமாக கொடுங்கள் என்றான். அதற்கு அரசன்,'எத்தனை காணி நிலம் வேண்டும்?'எனக் கேட்க 'கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலுள்ள நிலத்தை பரிசாக தரும்படி'கேட்டான் வீரன். அவனது பேராசையை புரிந்து கொண்ட மன்னன்,'குத்துமதிப்பாக சொன்னால் எப்படி?உனக்கு எவ்வளவு நிலம் வேண்டுமோ,அது வரைக்கும் ஓடிச்சென்று நமது கொடியை நட்டு விட்டு திரும்பி வா! அத்தனை நிலமும் உனக்கே சொந்தம்'என்றான். வீரன் ஓடினான்..ஓடினான்..பல காணி நிலங்களைக் கடந்தான்,யார் யாருக்கெல்லாம் சொந்தமானதோ அந்த நிலங்களின் மீதெல்லாம் ஓடினான்,ஆறு,மலைகளை கடந்தான்,'இன்னும் கொஞ்சதூரம் ஓடுவோமே! இன்னும் கொஞ்சதூரம் ஓடுவோமே!' என்று ஓடியதில் மன்னனின் எல்லைகளையும் தாண்டி விட்டான். ஏற்கனவே தோற்றுப் போன கடுப்பில் இருந்த எதிரி நாட்டு வீரர்களிடம் அகப்பட்டுக் கொண்டான் பாண்டிய வீரன்.தனியாக மாட்டிய பாண்டிய தேசத்து வீரனை,அவனது கொடியை வைத்து அடையாளம் கண்டு நையப்புடைத்துக் கொன்றனர். நிலப்பேராசைக் கொண்ட எல்லா மனிதர்களுக்கும் இக்கதையை ஒரு பாடமாக சொல்லலாம்.' எவ்வளவுதான் எண்ணெய் பூசி நிலத்தில் புரண்டாலும்,ஓட்டுகிற மண்தான் ஒட்டும்'என்கிற சாதாரண தத்துவம் கூட ஏனோ மனிதர்களுக்குப் புரிவதில்லை! தனக்கு பின் வருகிற எல்லா தலைமுறைகளுக்கும்,எந்த வழியிலாவது சொத்துக்களை சேர்த்து விடத் துடிக்கிறார்கள்.ஆசைகள் பெருகவே,குற்றங்களும் பெருகிவிட்டன. சாதாரண குப்பன்,சுப்பன் என்கிற அளவில் நடைபெற்று வந்த நில மோசடிகள் இப்போது வி.ஐ.பி க்கள் வரை வெகு தாராளமாக நடந்தேறி வருகின்றன.2006-11 காலக்கட்டத்தில்(மட்டும்)நடைபெற்ற நில மோசடிக் குற்றங்களை விசாரிக்க,தனிப்பிரிவு அமைக்கப்பட்ட இரண்டே வாரங்களில் 1449 புகார்கள் பதிவாகி இருக்கின்றன என்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்திரம் மற்றும் உரிய ஆவணங்கள் இருந்தும் நிலங்களை நிறைய அப்பாவிகள் பறிகொடுத்திருக்கிறார்கள்.போலிப் பட்டாவைப் பெற்றுக்கொண்டு,பணத்தினை இழந்திருக்கிறார்கள்,ஒரே நிலம்,பல பேருக்கு விற்கப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். சில காவல்துறை அதிகாரிகள்,சில பத்திரப் பதிவு அதிகாரிகள் ஆசியுடன் அரசியல் ரௌடிகள் மட்டுமல்ல,அமைச்சர்களும்,நிலக்கொள்ளைகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு திகைத்துப் போயிருக்கின்றனர் தமிழக மக்கள். ஜனநாயகத்தின் மீதும்,அரசின் மீதும்,நம்பிக்கை உடைய அப்பாவிகளின் உடைமைகளையும்,சொத்துக்களையும் காப்பதற்கு தான் சட்டம்,அதிகாரிகள்,காவல்துறை போன்றவை இருக்கிறது என இதுவரை நாம் நினைத்தது தவறு போலிருக்கிறது. நிலப் பேராசை கொண்ட பாண்டிய நாட்டு வீரன் போல அடுத்தவர் நிலம் மீதெல்லாம் ஓடி அபகரிக்கும் நில முழுங்கிகளின் விவரம் தற்போது வெளிவர துவங்கி இருக்கிறது.இவர்கள் அத்தனை பேரும்,சற்றும் தாமதிக்கப்படாமல் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.இவர்களை தண்டிக்க இந்த அரசு வெகுகாலம் எடுத்துக் கொள்ள கூடாது .ஏனெனில் 'தாமதமாக வழங்கப்படும் நீதி மறுக்கப்பட்டதற்கு சமம்'. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

பர்ஸ் வேட்டை-ஜூலை-2011


தொலைக்காட்சி திரையில் ஒருநாள் பாதி ரஜினியையும்,பாதி கமலையும் இணைத்துக் காட்டப்பட்டது,எதற்கு ரஜினி முகத்தையும்,கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள்?என்று நான் நினைத்த போது,அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அபத்தமாக ஒரு கேள்விக் கேட்டார்.'திரையில் உள்ள இரு முன்னணி நட்சத்திரங்கள் யார்? என்பதுதான் அது.இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் 16 வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளுவை வேறு தருகிறார்.உடனே யாரோ ஒருவருக்கு லைன்(!) கிடைத்து விட,அவர்'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார்.ரஜினியையும்,கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்?என்ன கூத்து இது? தினமும் இரவு 10.30 மணிக்கு,துவங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது.பரிசுத் தொகையோ ரூ.55,000.என்ன நிகழ்ச்சி இது?இதன் பின்புலம் என்ன?உண்மையிலே பரிசு கொடுக்கிறார்களா?அவர்கள் நோக்கம் என்ன?என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன,இதுபோன்ற ஏமாற்றுப் போட்டிகளை தமிழகத்தின் மூன்று முன்னணி சேனல்கள் செய்கின்றன.திரையில் காட்டப்படும் அல்லது கேட்கப்படும் கேள்விகள் சிம்பிளாகவே அமைகின்றன. அதற்கு காரணம்,பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான். திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி எண்,உண்மையில் தொலைபேசி எண் அல்ல.அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் போன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்து விடும்.(ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்)ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெலாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில: 1.இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள் தான் பொதுமக்கள்.பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள்.பேசுபவரின் செல்போன் நம்பர்.ஊர் திரையில் காட்டப்படுவதில்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி. 2.ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக(அதுவும் ஸ்டுடியோ ஆள்தான்)நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில் தான் சரியான பதில் சொல்லப்படுகிறது,இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம். 3.கால் வெயிட்டிங்கிற்கு பதில்,நம்பர் பிஸி என்று ரிப்ளை வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால் கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும் பறிப்பதுதான் இவர்களின் நோக்கம். 4.நேயர் நினைப்பது போல இது லைவ்-ஷோ அல்ல.இது ஏற்கனவே ரெக்கார்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சி. அதாவது டெட் பாடிக்கு ஆபரேஷன். 5.இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல்,வேறு ஒரு நிறுவனத்திடம் இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு,தப்பித்து கொள்கின்றன டி.வி. சேனல்கள்இவர்கள் அடிக்கும் கூட்டுக்கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் உடந்தை. இந்த தலையங்கத்தை படித்த பிறகாவது,இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்த்து'கால்'பேசுவதை தவிருங்கள்.உங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள் நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்.குறிப்பிட்ட அந்த டி.வி.சேனல்களுக்கு ஒரு அட்வைஸ்! இது போன்ற நிகழ்ச்சிகளை தயாரிப்பதற்கு பதில் சுரண்டல் லாட்டரி விற்க போகலாம் ஏனெனில்,இதற்கும் அதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

அண்ணன் போட்ட சட்டை! ஜூன்-2011


இத்தனை சீக்கிரமாக ஆளும் கட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பது நாகரிகம் இல்லைதான்.ஆனால், கடந்த முறை இதே அரசின் பிடிவாத செயல்பாடுகளால் இன்னலுற்ற நமக்கு சமீபகாலமாக தோன்றியிருக்கும் சில ஐயப்பாடுகளை யாரிடம் போய் கேட்க.. புதிய சட்டசபைக் கட்டிடத்திற்கு ஏன் குடிபோகவில்லை என்கிற வழக்கமான கேள்வியை நாம் கேட்கப் போவதில்லை,ஏனெனில்,அதற்கு தான்,'இன்னும் கட்டுமானப் பணிகள் முடியவில்லை.இரண்டு ஆண்டுகள் கழித்து பணிகள் நிறைவுற்ற பிறகு,புதிய கட்டிடத்தில் சட்டசபை அலுவல்கள் நடைபெறும்' என பொருத்தமான பதிலை முதல்வர் கூறியிருக்கிறாரே. நம்முடைய பயமெல்லாம் இதே போன்ற பொருத்தமான பதில்களைச் சொல்லியே கடந்த அரசு கொண்டுவந்த சில உருப்படியான திட்டங்கள் கூட முற்றுப் பெற்றுவிடுமோ என்பதுதான். தி.மு.க அரசு அடிக்கல் நாட்டியது என்பதற்காக,பெரம்பூர் மேம்பாலத்தின் அடுத்தக்கட்டப் பணிகளை ஒரு அங்குலம் கூட நகராமல் பார்த்துக் கொண்ட இந்த அரசின் கடந்த செயல்பாடுகள் நம்மை பயமுறுத்துவதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது? (மேம்பால கட்டுமானப்பணி பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக எத்தனை ஆயிரம் மக்கள் அந்த 5 ஆண்டு காலம் அல்லல்பட்டார்கள் என்பதை நாம் அறிவோம்). புதிய அரசின் தேர்வுக்குப் பிறகு சமீபகாலமாக,தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த பல கட்டுமானப் பணிகள் சுணங்கிப் போயிருப்பதாக வெளிவரும் தகவல்கள் இன்னமும் நம்மை அச்சம் கொள்ளச் செய்கின்றன.சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் அதற்கு ஓர் உதாரணம்.மேலும்,காப்பீடு திட்டம்,இலவச கான்கிரிட் வீடுகள் வழங்கும் திட்டம் போன்ற ஏழைமக்களின் நலவாழ்வுத் திட்டங்களின் வருங்காலம் எப்படி இருக்கும்?அவற்றைப் பற்றிய அரசின் நிலைப்பாடு என்ன?என்பதைக் கூட இன்னும் தமிழக அரசு தெளிவாக அறிவிக்கக் காணோம். உடனுக்குடன்,அரசியல் காட்சிகள் வெகுவேகமாக மாறும் நமது மாநிலத்தில்,திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியவர்தான்,திறப்பு விழா வரை வந்து முடிக்க வேண்டும் என்பது இயலாத காரியம்.முந்தைய அரசின் திட்டங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் கூட அவற்றைத் திருத்தி இன்னமும் விரைவாக நிறைவேற்ற முயல்வதுதான் மக்கள் நலன் விரும்பும் அரசின் செயல்பாடாக இருக்கும். கல்வெட்டில் யார் பெயரைப் பதிப்பது?எந்தெந்த திட்டங்களுக்கு யார் யார் பெயரை வைத்துக்கொள்வது?போன்ற ஈகோ பிரச்சனைகளுக்கு இடம் அளிக்காத பெருந்தன்மையான அரசைத்தான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.அண்ணன் போட்ட சட்டையை,தம்பி.'போட மாட்டேன்!' என அடம் பிடிப்பது குழந்தைகளுக்கு வேண்டுமானால் விளையாட்டாக இருக்கும்.மாநில தலைவர்களுக்கு அல்ல. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

யாருடைய வசதிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி!-மே-2011


நகரின் உள்ளேயும்,வெளியேயும் ஆங்காங்கே காலியாக இருக்கும் நிலங்களைக் கையகப்படுத்தி சீரமைத்து அவைகளை வீட்டு மனைகளாகவோ,குடியிருப்புகளாகவோ கட்டி மக்களிடம் ஒப்படைக்கும் பணியை செய்வதுதான் வீட்டு வசதி வாரியம்.தானே நிலம் வாங்கி வீடு கட்ட முடியாதவர்களுக்கும்.பில்டர்களிடம், ஃப்ளாட் வாங்கும் வசதியற்றவர்களுக்கும் தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் ஒன்று தான் ஆதரவு. இது "யானை பசிக்கு சோளப் பொரி என்கிற கதையாக இருந்தாலும் அவ்வபோது கிடைக்கும்100,200 வீடுகள் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை குறைந்த அளவிலாவது பூர்த்தி செய்து வருகிறது. முகப்பேர் ஏரித்திட்டத்தில் ஐநூற்றுச்சொச்சத்து வீடுகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் விற்க முன் வந்த போது அதற்கு வந்த விண்ணப்பங்கள் ஒன்றரை லட்சத்தைத் தாண்டியது என்பதில் இருந்தே மக்களின் தேவைக்கும், வீட்டு வசதி வாரியத்தின் செயல்பாட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு புறம் இருக்க, கட்டப்படும் வீடுகளில் 15 சதவீதம்,அரசின் விருப்புரிமை என்ற திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இவை விண்ணப்பதாரரிடம் இருந்து வீடு ஒதுக்கீடு தொடர்பாக விண்ணப்பம் ஏதும் இல்லாமலேயே அரசாங்கத்தின் மூலம் ''வேண்டியவர்களுக்கு'' ஒதுக்கப்படுகிறது 'அரசின் விருப்புரிமை தானே! அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தான் வீடுகளை வழங்குவார்கள்''.என நீங்கள் நினைக்கலாம்.தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து பொதுமக்கள் வீடு வாங்குவதற்கும் அரசின் விருப்புரிமை திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற்றவர்கள் வீடுகளை வாங்குவதற்கும் வேறுபாடு உள்ளது. பொதுமக்கள் விண்ணப்பிக்கும் போது, குறைந்தபட்சம் ரூ.50,000/-கட்டணம் செலுத்தி பின்னர் அதிர்ஷ்டம் இருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே வீடு கிடைக்கும். ஆனால் அரசின் விருப்புரிமை திட்டத்தில் வீடு பெறுபவர்கள் அதிர்ஷ்டம் உடையவர்களே.அவர்கள் பணத்தைக் கொடுத்து வீடு வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். இதுதான் வேறுபாடே தவிர விலையில் எந்தக் குறைப்பும் இருக்கக் கூடாது.ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அரசின் விருப்புரிமையின் கீழ் வீடு பெற்றவர்கள் சந்தை மதிப்பை விட மிக குறைந்த விலையில் வீடு மற்றும் மனைகளைப் பெற்றிருக்கின்றனர்.இந்த முறைகேட்டினால் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு அரசிற்கு இழப்பு ஏற்பட்டிருகிறது. சமூக சேவையாளர்கள் ஒதுக்கீட்டில் நிலம் பெறுவது,பெரிய பெரிய டாக்டர்கள் வக்கீல்கள்,தொழிலதிபர்கள் இவர்கள்தான். இல்லாதவர்களுக்கு ஒரு நீதி, இருப்பவர்களுக்கு ஒரு நீதி என்கிற மனப்பான்மைக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒரு உதாரணமாகாமல் இருக்க வேண்டுமெனில் அது செய்ய வேண்டியது கீழ் கண்டவைதான். 1.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் திட்டங்களும்,செயல்பாடுகளும் வெளிப்படையாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். 2.வீடு,மனை பெறுவதற்கான குலுக்கல் நியாயமாக, வெளிப்படையாக நடைபெற வேண்டும்,ஒரே நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நிலம்,மனை விற்கக் கூடாது, 3.நகரத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஏராளமான பயன்படுத்தப்படாத நிலங்களை வாங்கி, அவற்றில் வீடுகள் கட்டி பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஒதுக்கீடு வேண்டும். அல்லது இவற்றை கட்டுநர்களிடம் ஒப்படைத்து பொதுமக்களுக்கு பயன்படும்படி செய்ய வேண்டும். 4.அரசியல் நிர்பந்தங்களுக்கு ஆட்பட்டு அரசின் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு வீடுகள் போவதை தடுக்க வேண்டும். இதுவரை குறுக்கு வழியில் வீடுகளை பெற்றவர்களிடம் இருந்து வீடுகள் அல்லது நிலங்கள் பறிக்கப் பட வேண்டும். இதெல்லாம் நடைபெறவில்லை என்றால், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்பது தனிப்பட்ட சிலரின் ''வசதி'' க்காக ஏற்படுத்தப்பட்ட வாரியமோ என்று பொதுமக்கள் நினைக்கும் அபாயம் இருக்கிறது. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

ஐந்து நிமிடம் ஒதுக்குங்களேன் -ஏப்ரல்-2011


நெருங்கிய உறவினர் அவர்.எந்த நேரமும் பிஸியான அவரை எதிர்பாராமல் சந்தித்தேன்.நிறைய விஷயங்கள் பேசிவிட்டு ,;;வீட்டில் உள்ள லைப்ரரி புத்தகங்களை அகர வரிசைப்படி அடுக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருந்தீர்களே செய்தாகி விட்டதா'' என்று கேட்டேன்.''இல்லை இல்லை.வருகிற விடுமுறை நாளில் தான் அதை திட்டமிட்டிருக்கிறேன்''என்றார். ''மனை ஒன்று சீப்பாக வருகிறது என்றீர்களே! போய்ப் பார்த்தாகிவிட்டதா?''என்றேன்.''அதையும் அன்றுதான் செய்யவேண்டும்.அது மட்டுமல்ல,போர்டிகோவை காலி செய்து வேண்டாத பொருட்களை வெளியே தூக்கிப் போடவேண்டும்.தோட்டத்தில் உள்ள புதர்களையும் வெட்ட வேண்டி இருக்கிறது.நிறைய வேலைகளை செய்ய அன்று திட்டமிட்டிருக்கிறேன்.முடிந்தால்,வெகு நாட்களாக பார்க்காமல் இருந்த உறவினர்களையும்,நண்பர்களையும் நேரில் சென்று பார்க்க இருக்கிறேன்.ஏனெனில்,அவர்கள் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் இருப்பதில்லை'' என்றார். '' ஞாயிற்றுக்கிழமை இல்லையா?பின்னர் விடுமுறை தினம் என நீங்கள் கூறியது என்று?'' ''அதான் தேர்தல் நாள் ஏப்ரல் 13.அன்றுதான் சொன்னேன்'' ''தேர்தல் நாள் விடுமுறை நாளா? '' ''ஆம்.அன்று விடுமுறைதானே? அன்று மதியத்திற்குள் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டால், மதியத்திற்கு மேல் செம்மொழிப் பூங்கா,மாலை சத்யம் தியேட்டர்''என சொல்லிக்கொண்டே போனார். ''தேர்தல் அன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி சொன்னீர்களே,அதே நாளில் முக்கிய வேலையான ஓட்டுப் பதிவினை எப்போது செய்வீர்கள்?''என்றேன். ''ஓட்டா?நானா?குடும்பத்தோடு கியூவில் நிற்பதா?''என சிரித்தார்.''கிடைக்கும் நேரத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது என யோசிப்பதுதான் புத்திசாலித்தனம்''என தத்துவம் பேசினார். ''வாக்களிக்கும் நேரத்தை வீணாகும் நேரம் என்றா சொல்கிறீர்கள்.வாக்களிக்க ஐந்து நிமிடம் ஒதுக்க முடியாத மனப்பான்மை கொண்ட உங்களைப் போன்ற பலரால்தான் நிறைய ஐந்து,ஐந்து ஆண்டுகள் நமது மாநிலத்திற்கும்,நாட்டிற்கும் வீணாகிப் போய்விட்டன.95% மதிப்பெண் எடுத்தால் கூட நமது பிள்ளைகளை முட்டாள் என்று தான் திட்டுகிறோம்.100% ஆசைப்படுகிறோம்.ஆனால்,பெரும்பாலும் நமது நாட்டின் வாக்குப் பதிவு 60% தாண்டவில்லை. ஒரு சட்டையை வாங்குவது என்றாலும்,பேனா புத்தகம் வாங்குவது என்றாலும்,வீட்டிற்கு மிதியடி வாங்குவது என்றாலும் நாம் கடைக்குச் சென்றவுடன் வாங்குவதில்லை.சில நிமிடங்களாவது காத்திருக்கிறோம் ஆனால்,நமது நாட்டின் அடுத்த 5 ஆண்டுகள் நம்மை வழிநடத்தப் போகும் அரசியல் தலைமையை தேர்ந்தெடுக்க நம்மால் 5 நிமிடங்கள் கூட ஒதுக்க முடியாதா?நினைவில் கொள்ளுங்கள்.வாக்குரிமை இருந்தும் வாக்களிக்காத அனைத்து மக்களுமே சொந்த நாட்டு அகதிகள் தான்'' என்றேன். எதையோ யோசித்து''சென்று வருகிறேன்''என்று கிளம்பியவரிடம்,அவசரப்படாதீர்கள் தேர்தல் ஏப்ரல் 13 அன்றுதான்''என்றேன் . ''அதில்லை வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும்''என்று கிளம்பிவிட்டார் உறவினர். E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

ஹாரி பாட்டரும் ஆற்று மணலும்-மார்ச்-2011


எனது நண்பர் அப்போதுதான் இலண்டனிலிருந்து வந்திருந்தார்.நேரில் சென்று பார்த்த போது,கையில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள்.சென்ட் பாட்டில்,செல்போன்,லேப்டாப்,லெதர் ஜாக்கெட், ஹாரிபாட்டர் புத்தகம் இன்னும் நிறைய.. 'இந்தா,இது புதுசா குழந்தைகளுக்கான மாயாஜால புத்தகம்.உனது மகளுக்கு எனது பரிசாக கொடு' என்று ஹாரிபாட்டர் புத்தகத்தை கொடுத்தார்.''இது சென்ற வாரம் இங்கிலாந்தில் ரிலீஸ் ஆன புதிய பதிப்பு.விலை 8 பவுண்டுகள்''என்றார் என் நண்பர். ''இது சென்னையிலே கிடைக்கிறதே! நேற்றே இதை வாங்கி விட்டேன். விலையும் கிட்டத்தட்ட இதேதான்'' என்றேன். ''அப்போ,இந்த செல்போன்,லேப்டாப்?'' ''இவை எல்லாமே இதே விலையில் இந்தியாவில் கிடைக்கிறது.'' இந்தியாவில் அதிகம் கிடைக்காத பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி வந்து,குடும்பத்தினரையும்,நண்பர்களையும் அசத்த நினைத்திருந்த அவருக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ''உலகம் சுருங்கிவிட்டது நண்பா.உலகின் ஏதோ ஒரு மூலையில் ரிலீஸ் ஆகும் சினிமா,லேட்டஸ்ட் மாடல் செல்போன்,எல்.சி.டி.டிவி.என எல்லாப் பொருட்களுமே உலகின் எல்லாப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட அதே விலையில் கிடைத்துவிடும்.இதைத்தான் உலகமயமாக்கல் என்கிறோம்.அடுத்த தடவை இங்கிலாந்திலிருந்து வரும் போது,சச்சினின் மெழுகு பொம்மைக்குப் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துவா. அது போதும் என்றேன் சிரித்தபடி. இரண்டு நாட்கள் கழித்து அதே நண்பரிடம் இருந்து போன்.''உலகமயமாக்கல் குறித்து விளக்கம் சொன்னாயே,சென்னையில் ஒரு யூனிட் ஆற்று மணல் விலை என்ன?''என்று கேட்டார். கட்டுமானத்துறை பத்திரிகை ஆசிரியரான எனக்குத் தெரியாதா? ''ரூ.3,700''என்றேன். ''திருச்சியில் என்ன விலை?'' தயங்கியபடி ''ரூ.1,150''என்றேன். ''மதுரையில் ஒரு யூனிட் ஆற்று மணல்?'' ''ரூ.7,000''என்றேன் முகம் வியர்த்தது. ''ஐயாயிரம் கி.மீ.தொலைவில் கிடைக்கும் ஹாரிபாட்டர் புத்தகம் உங்களுக்கு அதே விலையில் கிடைக்கிறது. ஆனால்,சில நூறு கி.மீ தொலைவில் கிடைக்கும் ஆற்று மணல் 6 மடங்கு விலை வித்தியாசத்தில் விற்கப்படுகிறது.இதுதான் உலகமயமாக்கலா? தாராளமயமாக்கலா? 'அது வந்து.தாமிரபரணியில் மண் எடுக்கத்தடை.மணல் குவாரிகள் மூழ்கிவிட்டன.அதனால்தான் மதுரையில் மட்டும்..''என நமது கட்டுமானத்துறையில் ஏற்படுகின்ற விசித்திரமான குழப்பங்களுக்கு விளக்கம் சொல்ல நான் முற்பட்டேன்.ஆனால் எதிர்முனையில் போன் எப்போதோ வைக்கப்பட்டிருந்தது. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

இவர்களை பாருங்கள்!இவர்களையும் பாருங்கள்!-பிப்ரவரி-2011


ஜனவரி-15,பொங்கல் தினத்தில் தமிழ்நாடே சோகத்தில் மூழ்கி விட்டது.மகர விளக்கு பூஜை விழாவின் கூட்ட நெரிசலில் 106 பேர் சிக்கி சின்னாபின்னமாயினர்.நெஞ்சுக் கிழிந்து,குடல் சரிந்து கறுப்பு உடையிலும்,காவி உடையிலும் சன்னதிக்கு அருகே சரணம் ஆகிப்போயினர். மகாமக திருவிழா கண்ட தமிழனுக்கு இது பழகிப்போன ஒன்று என்பதால்,தமிழக அரசோ வழக்கம்போல் தலைக்கு சில லட்சங்கள் வழங்குவதாய் அறிவித்தது.தேர்தல் நெருங்குகையில் அது இன்னும் அதிகரிக்கவும் கூடும்.கேரள அமைச்சகமும்,நீதிமன்றமும் இணைந்து விசாரணை கமிஷன் நாடகத்தை அரங்கேற்ற ஒப்புக் கொண்டன. இந்த 106பேரில் தமிழ்நாடு எத்தனை பேர்?ஆந்திரா எத்தனை பேர்?என பத்தி பிரித்து எழுதின பத்திரிகைகள். மகரஜோதி மனிதர்கள் ஏற்றுவதா?அல்லது ஓவர் டைமில் கடவுள் ஏற்றுவதா?என்று மைக் பிடித்து பேசின தொலைக்காட்சி சேனல்கள்,சிலர் விளக்குகள் இல்லை என்றனர்,சிலர் வாகனங்களின் தொல்லை என்றனர்.சிலர் காவலர்கள் இல்லை என்றனர்,குறுக்கு வழியில் கடவுளை பார்க்கப் போனதால் வந்த வினை என்று பக்தர்களை பரிகாசம் செய்தனர். ஆனால்,இத்தனை துயரத்திற்கும் பெரிதாக ஒரு காரணம் இருக்கிறது.அதுதான் உள்கட்டமைப்பு,நகரத்திற்கும் சரி,கிராமத்திற்கும் சரி,ஆள் அரவற்றமற்ற நடுக்காட்டிற்க்கும் சரி,அந்தந்த இடத்தின் தேவைக்கேற்ப,பயன்பாட்டிற்கேற்ப உள்கட்டமைப்பு இல்லை என்றால் இப்படிப்பட்ட விபரீதங்கள் தான் தலை விரித்தாடும் என்பதற்கு மகரஜோதி சம்பவம் ஓர் சாட்சி.அது மகரஜோதி திருவிழா என்றாலும் சரி,மகா சிவராத்திரி திருவிழா என்றாலும் சரி,பொன்னியம்மன் மேடோ,பம்பை நதியோ,தகுதியான உள்கட்டமைப்பு களை ஏற்படுத்த கேரள அரசு முயற்சிக்க வேண்டும் என்பதைத்தான் இந்த 106 பேர்கள் சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு,பத்து லட்சம் பேர் கூடும் மெக்கா யாத்திரையில் சாத்தான் மீது கல்லெறியும் சடங்கில் கூட இதுபோன்ற உயிரிழப்பு சம்பவம் நடந்தது.ஆனால் அந்நாட்டு நிர்வாகம் விழித்துக்கொண்டு பாதசாரிகளுக்கென்று ஒரு பாலத்தை அமைத்துக் கொடுத்தது. உலகிலேயே மனிதர்கள் நடந்து செல்வதற்காக பாலம் அமைக்கப்பட்டது அநேகமாக இங்குதான் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலிருந்து வருபவர்களுக்கும்,கல்லெறிந்து விட்டு திரும்புபவர்களுக்கும் தனித்தனியே ஏராளமான பாதைகளும்,பாலங்களும் உருவாக்கினர். பல லட்சம் மக்கள் அங்கு கூடினாலும் அங்கு எவ்வித பதைபதைப்பும் கிடையாது,ஏனெனில்,அங்கு கட்டுமானங்களை விட யாத்ரீகர்களின் ஒழுக்கங்கள் வலுவானவை.மெக்காவும்,மெக்காவிற்கு செல்லும் மக்களும் பாடம் கற்றுக்கொண்டனர். நாம் எப்போது கற்றுக் கொள்ளப் போகிறோம்? E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

எங்கே அந்த பூகோளம் தெரியாதவர்?-ஜனவரி-2011

1963.அந்த முதலமைச்சர் கொஞ்சம் பாமரத்தனமானவர்,படிக்காதவர்.பொதுக்கூட்டங்களில் அவரை எதிர்த்துப் பேசும் எதிர்கட்சிகள் அன்றாடம் இந்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டுதான் போரிடும். பூகோளம் தெரியுமா உனக்கு?எனக் கேட்டு கெக்கலிப்பார்கள் ஆனால்,அவர் மட்டும்தான் நாட்டில் உள்ள மொத்த ஆறுகள்,ஏரிகள்,அணைக்கட்டுக்களை அறிந்து வைத்திருந்தார்,கணக்கு தெரியுமா?என்பார்கள்.நாட்டின் வேலையற்ற தொழில் வளங்களையும் பற்றிய கணக்கு விவரங்கள் அவருக்கு அத்துப்படி. அறிவியல் தெரியாதா அவரால் தான் 150 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாயின. ஒவ்வொரு துறையிலும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே அனுமானித்து அகற்ற அந்த தொழில் மேதையால் மட்டுமே முடிந்தது. அந்த எதிர்கட்சிகளின் பெயர்கள் நமக்கு தேவையற்ற ஒன்று ஆனால்,அந்த முதலமைச்சரின் பெயர் காமராஜர். காட்சி மாறுகிறது -2011 டாஸ்மாக் வருமானங்கள்,இலவச திட்டங்கள்,வேண்டாமென மறுத்தாலும் புறங்கையில் ஆயிரம் ரூபாய் தாளை சொருகி விட்டுச் செல்லும் பாசக்கார கட்சிகள், நிதிப்பற்றாக்குறை ஆகும்போதெல்லாம் புதிய வரியை உருவாக்கும் நிர்வாகங்கள்.தலைபோகிற பிரச்சனைகளின்போதும் தலையசைத்து கேட்க விழையாத மெத்தன அரசுகள். 2010-ன் இறுதியில் ஒட்டுமொத்த கட்டுமானத்துறையை கலங்கடித்த,கலங்கடித்துக் கொண்டிருக்கும் கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தப்போவதாக யாதொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.தலைப்புச் செய்தியாக இடம் பிடித்த வெங்காய விலை உயர்வின் தகுதி கூட கட்டுமானத் துறைக்கு இல்லை போலிருக்கிறது. பிரசானியா வரும் வரை அதைப்பற்றி சற்றும் யோசிக்காமல் இருப்பது,அது வந்த பிறகு ஒரே அடியாக துள்ளி குதிப்பது இதுதான் நம் நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம்.குறைந்த பட்சம் அந்த பழக்கம் கூட கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதில் எவருமே அரசு இதுவரை கடைப்பிடிக்கவில்லை. 1963-டன் ஒப்பிடும் போதும் தற்போது மேம்பட்ட தொழில் நுட்பம்,அதிநவீன அரசு துறைகள்,அதிகாரிகள் இன்னும் பல இவற்றிற்கு நடுவில் அனைத்துத் துறைகளையும் கரைத்து குடித்த ஒரு தலைவர்.காண்பதற்கும்,கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் தொழில்கள் வாழ்வதற்கு? பூகோளம் தெரியாத,அறிவியல் அறியாத,கணக்கு தெரியாத பாமரத்தனமான அந்த முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? நாம் கேட்கவில்லை.நாடு கேட்கிறது! E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்